தெற்காசிய கால்பந்து (20 வயதுக்குட்பட்டோர்) தொடரின் 6வது சீசன் நேபாளத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்திய அணி பூடான் மற்றும் மாலத்தீவுகளுடன் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
நேற்று இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பூடானை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் இந்தியாவுக்கு ‘கார்னர் கிக்’ கிடைத்தது. மொனிருல் மொல்லா கெல்வின் பந்தை பெற்று தலையால் முட்டி கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் இந்தியாவின் பிரம்வீருக்கும், பூடானின் கின்லேக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டது. தவிர, மற்றொரு இந்திய வீரர் வன்லால்பெகேயும் (‘சிவப்பு அட்டை’) வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து மீதம் இருந்த 21 நிமிடம் இந்திய அணி 9 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. இருப்பினும் பூடான் சவாலை சமாளித்த இந்திய அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது.