Thursday, March 28, 2024
Homeசினிமாஇன்றைய தமிழ் சமூகத்தில் “பெண் குழந்தை”? (girl-child-in-todays-tamil-society)

இன்றைய தமிழ் சமூகத்தில் “பெண் குழந்தை”? (girl-child-in-todays-tamil-society)

Girl child in todays tamil society

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான படம் “கருத்தம்மா”. 1996ல் நான் பிறந்தேன். நான் பிறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே அதாவது 1994 ல் வெளியான இந்தப் படத்தில் பெண் குழந்தைகள் கள்ளிப்பால் ஊற்றி கொல்லப்படுவதை காட்டி இருப்பார்கள். பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களை கொல்லாமல் வளர்க்க வேண்டும் என்று கூறி இருப்பார்கள். ஆனால் வருடங்கள் தான் ஓடியதே தவிர நம் மக்களிடம் பெண் குழந்தைகள் குறித்தான விழிப்புணர்வு ஏற்படவே இல்லை. இன்றைய சமூகத்தில் பெண் குழந்தைகள் எப்படி பார்க்கப்படுகிறார்கள், அவர்கள் உலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

திருநங்கை: 

ஆண் இனமாக பிறந்த ஒரு மனிதர் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்களை போல நடந்துகொண்டால் அதாவது பெண்களின் நடை உடையை பின்பற்றினால் இந்த சமூகம் அவ்வளவு கேவலமாக பார்க்கிறது. அவர்கள் வேண்டுமென்றா அப்படி செய்கிறார்கள்… அது ஒரு இயற்கையான மாற்றம். அந்த மாற்றத்தை யாரும் மனதார ஏற்றுக்கொள்வதில்லை. “ஐய ச்சீ இவன் பொம்பள மாதிரி நடந்துக்குறான் பாரேன்…” என்கிறார்கள். ஏன் பொம்பள மாதிரி நடந்துகொண்டால் என்ன தவறு? பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா?

பாவ கதைகள் என்ற ஆந்தாலஜி படத்தில் “ஆணவ கொலை” என்ற சமூக பிரச்சினையை கருவாக வைத்து  நான் குறும்படங்கள் எடுக்கப்பட்டு இருந்தன. அதில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய “தங்கம்” என்கிற குறும்படம் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்தக் குறும்படத்தில் சத்தாரு என்கிற முஸ்லீம் சமூகத்து இளைஞன் திருநங்கையாக மாறிவிடுவான். அவனை நான்கு பொறுக்கிகள் துரத்திக் கொண்டு வரும்போது  சத்தாரின் நண்பன் அவர்களை வழிமறித்து “ஏன் என் நண்பனிடம் வம்பு செய்கிறீர்கள்” என்று கேட்க அதற்கு அந்த பொறுக்கிகளில் ஒருவன் “அவன் ஏன் பொம்பள மாதிரி நடந்துக்குறான்” என்று பதில் கேள்வி கேட்பான். அதற்கு சத்தாரின் நண்பன் “சத்தாரு என்னைக்காவது உங்ககிட்ட நீங்க ஏன் ஆம்பள மாதிரி நடந்துக்குறிங்கன்னு கேட்ருக்கானா?” என்று கேட்க அந்தப் பொறுக்கிகள் அங்கிருந்து நகர்ந்து செல்வார்கள்.

களப்பலி: 

ஆனந்த விகடனில் பிரசுரமான எழுத்தாளர் கவிப்பித்தன் எழுதிய “களப்பலி” என்கிற சிறுகதையில் ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று நான்கு பேர் வாழ்கிறார்கள். அந்தக் குடும்பத்தில் உள்ள ஆண் குழந்தைக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போகிறது. கடுமையாக பாதிக்கப்படுகிறது அந்த ஆண் குழந்தை. அப்போது அந்தக் குழந்தையின் அப்பாவிடம் பெரியவர் ஒருவர் “உன்னுடைய பொட்ட பிள்ளைய பலி கொடுத்திட்டா ஆண் குழந்தைக்கு எல்லாம் சரியா போயிடும்…” என்கிறார். அந்த அப்பாவோ ஆண்குழந்தை தான் முக்கியம் என்று பெண் குழந்தையை பலி கொடுக்க சம்மதிக்கிறார். நெஞ்சை பதற வைத்த சிறுகதை அது.

இந்த களப்பலி குறித்து திரைப்பட இயக்குனர் ஒருவரிடம் பேச முடிந்தது. “இது பல வருடங்களாக நடந்து வரும் பிரச்சினை நண்பரே… ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக அதிக மெடல்கள் வாங்கியவர்கள் பெண்களாக இருந்த போதிலும் பெண் குழந்தைகளை களப்பலி செய்யும் கொடூரம் நடந்து கொண்டு தான் இருக்கிறது” என்று அவர் சொன்னார்.

ஆண்கள்: 

கார்டூனிஸ்ட் பாலா அவர்களின் முகநூல் பதிவு ஒன்றில் தனக்கு மூன்றாவது குழந்தையும் ஆண் குழந்தையாக பிறந்துள்ளது, எனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார். அதை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருந்தது. அவரை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். காரணம் எல்லோரும் ஆண் குழந்தை வேண்டும் என்று நினைப்பார்கள்… ஆனால் அவரோ பெண் குழந்தை வேண்டுமென மூன்று முறை முயற்சித்துள்ளார் என்பதுதான்.

எந்த மாநிலம் என்று சரியாக தெரியவில்லை, ஒரு ஆண் டாக்டர் ஒருவர் தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் கட்டணம் வசூலிப்பதில்லை… இது என் அம்மாவின் அன்பான கட்டளை என்று அவர் சொன்னதாக முகநூலிலும் வாட்சப்பிலும் ஒரு செய்தி வைரல் ஆனது. அதை படிக்கும்போது பெருமையாக இருந்தது.

பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு குரல் கொடுப்பதற்காக students federation of india சார்பில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். மாணவ சமுதாயம் இப்படி இருக்க, ஆசிரிய சமுதாயமோ மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் இருந்து இதுவரை நான்கு ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். இந்த நான்கு ஆசிரியர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் ஆண்கள் சமுதாயத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.

பெண்கள் உடை: 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான “சிகப்பு மஞ்சள் பச்சை” என்ற படத்தில் சித்தார்த், ஜீவி பிரகாசுக்கு நைட்டு அணிந்து பொது சாலையில் தரதரவென இழுத்துச் செல்வார். அந்த உடை அணிவிப்பது அவமானமான செயல் என்பது அவருடைய கருத்தாக இருக்கும். அது குறித்து சித்தார்த்தின் அம்மா, “அது ஏன்டா பெண்கள் உடையை ஆண்கள் அணிவது கேவலம்னு பாக்குறிங்க… ஆண்களோட ஜட்டி முதற்கொண்டு பெண்கள் தானே துவைத்து போடுகிறார்கள் நாங்கள் அவ்வளவு கேவலமாக போய்விட்டோமா?” என்று கேட்பார். அதற்கு பிறகு சித்தார்த் தன் தவறை உணர்வார். அப்படி தமிழ் சினிமா முற்போக்கான வழியில் சென்று கொண்டிருக்க… பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகரான சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் பெண்களின் உடையை தாழ்த்தி பேசும் வகையில் ஒரு காட்சி வந்தது. ஏன் அப்படி காட்சி வைத்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் அவர் ஏதேதோ சொல்லி மழுப்புகிறார். அந்த மாதிரியான காட்சிகள் இனி என் படத்தில் வராது என்றும் அந்தக் காட்சியை நீக்குகிறோம் என்றும் அவர் சொல்லவில்லை.

பிறப்பு: 

சாலையோரம் ஒரு தாய் நாய்க்குட்டி தன் குட்டிகளுக்கு பால் ஊட்டிக் கொண்டிருக்கிறது. அந்தக் காட்சியை பலர் ஆசையாக பார்க்கிறார்கள். அழகாக இருக்கும் அந்தக் குட்டிகளை பார்த்தால் அவற்றை நம் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா என்று தோன்றுகிறது. அப்படி ஒரு எண்ணம் வருகையில் நாம் அனைவரும் முதலில் “அந்த நாய்க்குட்டி ஆண் குட்டியா” என்று பார்க்கிறோம். ஆண்கள் மட்டும் அந்த தவறை செய்வதில்லை, சில அம்மாக்களுமே கூட பெண் நாய்க்குட்டி வீட்டுக்கு ஆகாது என்று அருவருப்பாக பார்க்கிறார்கள். மனித இனமோ, நாய் இனமோ… எந்த இனமாக இருந்தாலும் பெண் இனம் என்றால் நாம் எல்லோருக்கும் இளக்காரம் தான்.

தீட்டு: 

இந்த “தீட்டு” என்கிற வார்த்தை என்னை ரொம்பவே பாதிக்கிறது. குறிப்பாக “தீட்டு” என்ற சொல் பெண்கள் மீது தான் அதிகம் திணிக்கப்படுகிறது. ஒரு பெண் குழந்தை வயதுக்கு வந்தால் அவளுக்கு நடத்தப்படும் பூப்புனித நீராட்டு விழாவில் பலர் சாப்பாடு சாப்பிட மறுக்கிறார்கள். ஏன் என்று கேட்டால் “தீட்டுச்சோறு” என்கிறார்கள். அவனவன் சோறு கிடைக்காமல் பசியால் வயிறு காய்ந்து சாகிறான், இவர்களோ சோற்றில் கூட தீட்டு பார்க்கிறார்கள். போங்கடா நீங்களும் உங்க சடங்குகளும் என்று திட்டி அவர்களை புறக்கணிக்க தோன்றுகிறது. பெண்களின் மாதவிடாய் நாட்களாய் “தீட்டு நாட்களாக” பார்க்கிறது நம் சமூகம். மாதவிடாய் நாட்களை வீட்டுக்கு தூரமான நாட்கள் என்கிறார்கள். அப்படி பெண்கள் தூரமாகிவிட்டால் அவர்களை தொடுவது தீட்டு, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் தீட்டு, அவர்கள் நின்ற இடம் தீட்டு என்று எல்லாமே தீட்டு ஆகிறது. மாதவிடாய் சுழற்சி மட்டும் இல்லையென்றால் மனித சமூகமே இல்லை. ஆனால் இந்த மனித சமூகம் இந்த மாதவிடாய் நாட்களை எவ்வளவு அருவருப்பாக பார்க்கிறது… கேட்டால் கலாச்சாரம் என்கிறார்கள். என்ன கலாச்சாரமோ?

புத்தகங்கள்: 

நம் தமிழ் சமூக எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் இரண்டு பெண் எழுத்தாளர்கள். அம்பையும் சு. தமிழ்ச்செல்வியும் தான் அந்த இரண்டு எழுத்தாளர்கள். பெண் ஏன் அடிமையானாள் என்கிற புத்தகத்தை பல சமூக ஆர்வலர்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார்கள்.  அதேபோல் விகடனில் தொடர் கட்டுரையாக வெளிவந்த “ஆண்பால் பெண்பால் அன்பால்” புத்தகத்தையும் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.  அனைவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது கண்டிப்பாக வாசிக்க வேண்டும். காரணம் அந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என மூன்று பாலித்தனவர்களும் சேர்ந்து எழுதிய புத்தகம். ஒரு இனத்தை (ஆண்/பெண்/திருநங்கை) விட மற்றொரு இனம் பெரியது என்றில்லாமல் அனைத்து இனமும் மனித இனம் என்று பாலின சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதை அழுத்தமாக சொன்ன படம். அதேபோல எஸ். பாலபாரதி எழுதிய “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” என்கிற புத்தகம் குட் டச் பேட் டச் பற்றி சொல்கிறது. மத்திய அரசின் பாலபுரஸ்கர் விருது வென்றுள்ள இந்தப் புத்தகத்தையும் அனைத்து பெற்றோர்களும் படிக்க வேண்டும், தங்களது குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கி கொடுக்க வேண்டும்.

பத்திரிக்கையாளர்கள்: 

பத்திரிக்கை துறையில் இப்போது நிறைய பெண்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆண்டவன் கட்டளை, ஒரு நாள் கூத்து, கோ போன்ற படங்களில் பத்திரிக்கை துறையில் பணியாற்றும் பெண்களை அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களை காட்டி இருப்பார்கள். அதே சமயம் 2021லும் கூட நிறைய பெண்கள் ஜர்னலிசம் படிக்க விரும்பினாலும் பெற்றோர்கள் அவர்களை சுதந்திரமாக விடுவதில்லை. டாக்டர், டீச்சர், நர்ஸ் என்று இந்த மூன்று படிப்புகளில் ஏதோ ஒன்றை தான் படிக்க வைக்கிறார்கள்.

பெண்களுக்கு அரசு சலுகைகள்: 

கையில் காசு இல்லாத சூழலில், செல்போனில் பேலன்ஸ் இல்லாத சூழலில்

எதாவது ஒரு இடத்திற்கு அவசரமாக பயணம் செய்ய வேண்டுமென்றால் ஆண்களுக்கு பிரச்சினை இல்லை சாலையில் வரும் எதாவது ஒரு வண்டியை மறித்து லிப்ட் கேட்டு பயணித்து விடுகிறார்கள். ஆனால் பெண்களால் அப்படி பயணம் செய்ய முடியாது. முன்பின் தெரிந்தவர் சாலையில் வந்தால் அவரோடு தைரியமா பயணிக்கலாம். ஆனால் அப்படி இல்லாத சூழலில் பணமும் செல்போனும் இல்லாத பெண்களின் நிலை என்ன? அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவசம் என்று புதிய அரசாங்கம் அறிவித்ததும் இது அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தக் கூடிய அறிவிப்பு என்றனர். நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை… பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று அரசு உறுதியாக இருந்தது பாராட்டத்தக்க ஒரு விஷியம்.

பொதுக் கழிவறை: 

சாலையோரம் மலங்கழித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவள் அவமானத்தால் தன் முகத்தை மூடிக்கொண்டு இருந்த காட்சியை ஒரு முறை பார்க்க முடிந்தது. அவளுக்கு வேறு வழியில்லை என்பதுதான் அவளது சூழல். அந்தக் காட்சியை பார்த்ததும் மனம் அடித்துக் கொண்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்கள் பொது இடங்களில் வெட்கமே இல்லாமல் அசிங்கம் செய்கிறார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் அவசரத்துக்கு வேற என்ன செய்கிறது என்று எகத்தாளமாய்க் கேட்கிறார்கள். பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பவே சிரமம் அனுபவிக்கிறார்கள்.

பொதுக்கழிவறைகளை அரசாங்கம் அதிகப்படுத்த வேண்டும். கூகுள் மேப்பில் “Public toilet near to me” என்று டைப் செய்தால் அருகில் உள்ள கழிவறைகளை காட்டும் வகையில் கூகுள் நிறுவனமும் அரசாங்கமும் வழிவகை செய்ய வேண்டும். இது பல பெண்களின் வயிற்று உபாதை பிரச்சினைகளை தவிர்க்க சிறந்த முன்னெடுப்பாக இருக்கும். கழிவறை மற்றும் கழிவறை ஊர்திகளை இன்னும் நிறைய அதிகப்படுத்த வேண்டும், இது

தாய்ப்பால் ஊட்டும் அறை, தாய் சேய் நல ஊர்தி போல பெண்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும். இயக்குனர் சுரேஷ் காமாட்சி இயக்கிய “மிக மிக அவசரம்” திரைப்படம் பணியில் இருக்கும் பெண்ணின் இயற்கை உபாதை பிரச்சினையை அழுத்தமாக பேசியிருந்தது. அருவம் என்கிற படம் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதால் அது போன்று உணவுகள் பெண் குழந்தைகளை சீக்கிரமே பூப்பெய்த வைத்து அவர்களை மாதவிடாய் பிரச்சினையில் சிக்க வைக்கிறது என்று கூறி இருப்பார்கள். நல்ல ஒரு கருத்தை அந்தப் படம் கூறி இருக்கிறது என்ற போதிலும் அந்தக் கருத்து பெரும்பாலான பெண்களை சென்றடைய வில்லையே? நிறைய விஷயங்களை வாட்சப் ஸ்டேட்டஸாக வைக்கிறோம். அந்த மாதிரியான காட்சிகளையும் வைக்கலாமே?

பாலியல் வன்கொடுமை: 

இனி இந்த எண்களை அம்மா, அப்பாவின் செல்போன் எண்களை மனப்பாடமாக வைத்திருப்பது போல் பெண் குழந்தைகள் மனப்பாடமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போது இதற்காக வருத்தப்படுவதா அல்லது பெண்கள் பலர் இப்போது சமூக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்… இது பல பெண்களின் வாழ்க்கையை மாற்றும் என்று சந்தோசப்படுவதா என்று தெரிவதில்லை. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களுக்கு மகளிர் நீதிமன்றங்கள் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுப்பதை நினைக்கும்போது “சபாஷ்! தண்டனைனா இப்படி இருக்கணும்…” என்று சொல்ல தோன்றுகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான “வான்மகள்” (பாவ கதைகள் ஆந்தாலஜி படத்தில் இந்தக் குறும்படமும் இடம்பெற்றுள்ளது.) படத்தில் வயதுக்கு வராத சிறுமி ஒருவரை அந்த ஊரை சேர்ந்த வாலிபன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்கிறான். அவனால் பாதிக்கப்பட்ட தன் மகளை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல நினைக்கும் தாய் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு தன் குழந்தையை திறமையான பெண்ணாக எதற்கும் தளராத பெண்ணாக வளர்க்க நினைக்கிறார். அதேபோல சர்ஜூன் இயக்கத்தில் வெளியான “மா” என்ற குறும்படமும் இளம் வயதில் சக நண்பனால் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் குடும்பம் பற்றி பேசி இருக்கும். இந்த இரண்டு படங்களையும்

மாணவ மாணவிகளுக்கான தேர்வுகள், ஆசிரியர்களுக்கான தேர்வுகள் போன்றவற்றில் பாலியல் வன்கொடுமைகள் பற்றியும் போக்சோ சட்டம் குறித்தும் கட்டாயமாக கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளி பெண்கள்: 

மாற்றுத்திறனாளி பெண் ஒருவரின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக இயக்குனர் ராம் “பேரன்பு” படத்தில் காட்டியிருப்பார். அந்தப் படத்தில்

மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வயதுக்கு வருவது போல் காட்சி வைத்திருப்பார்கள். சாதாரண பெண்களே மாதவிடாய் நாட்களில் படாதபாடு படும்போது மாற்றுத் திறனாளி பெண்களின் நிலையை நினைத்தால் மனம் தவிக்கிறது.

அரசாங்கம் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய சலுகைகள் வழங்குகிறது என்றாலும் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்னும் கூடுதல் சலுகைகளை வழங்கலாம்.

பெண்களுக்காக: 

அவள் விகடன், மங்கையர் மலர், லேடீஸ் ஸ்பெசல், ராணி, சிநேகிதி, தங்க மங்கை போன்ற பத்திரிக்கை இதழ்களும் Nakkalites Fzone, Blacksheep girls zone, unakenna paa girls zone, Neelam social – Dear girls, girly போன்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சிகளும் நம் தமிழகத்து பெண்களின் வாழ்வியலை பேசுகின்றன. ஆனால் நிறைய பெண்கள் “பெண்களுக்காக” நடத்தப்படும் இந்த இதழ்களையும் யூடியூப் சேனல்களையும் பார்ப்பது இல்லை. தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் அவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. கட்டிப் போட்டு நாம் வைத்திருக்கிறோம், சமையல் நிகழ்ச்சிகளையும் பக்தி நிகழ்ச்சிகளையும் சீரியல்களையும் பார்ப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் முற்போக்கான விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்று அவர்களை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை.

முடிவுரை: 

முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்தால் “ஆனந்த யாழை மீட்டுகிறாயடி…” (தங்க மீன்கள்) பாடலையும், “வா வா என் தேவதையே” (அபியும் நானும்) பாடலையும் வாட்சப் ஸ்டேட்டஸாகவும் காலர் டியூனாகவும் வைத்து மகிழ்கிறார்கள். அதே மனிதர்கள் தான் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்துவிட கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இயக்குனர் சார்லஸ் இயக்கத்தில் உருவான “அழகு குட்டி செல்லம்” படத்தில் கருணாஸ் ஆட்டோ ஓட்டுநராக நடித்திருப்பார். அவருக்கு ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென ஆசை. ஆனால் வரிசையாக அவருக்கு பிறந்தவர்கள் எல்லாம் பெண் குழந்தைகள். இனி பெண் குழந்தையே வேண்டாமென அந்தக் கடைசி பெண் குழந்தையை, குழந்தையின் தாய் (கருணாஸ் மனைவி) குப்பையில் வைத்துவிட்டு வருவார். அதை அறிந்த கருணாஸ் “நான் ஆண் குழந்தை வேணும்னு ஆசப்பட்டேன்… அதுக்காக பெறந்த பெண் குழந்தையை வளர்க்க மாட்டேன்னு சொல்லல…” என்று சொல்லி அந்தப் பெண் குழந்தையை திரும்ப பெற தேட முயற்சிப்பார். ஆனால் நிஜத்தில் அதுபோன்ற மனிதர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்… ஒருவித சலிப்புடனே பெண் குழந்தையை வளர்க்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

“பயத்தோடயும் வெறுப்போடயும் ஒரு உயிர இந்த உலகத்துக்குள்ள கொண்டு வரக்கூடாது…” என்பது “மா” குறும்படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனம். இந்த வசனத்தை நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இனி வரும் காலங்களில் “பெண் பூவே வா…” என்று உங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை பரிபூரண மனதோடு இந்த உலகிற்கு வரவேறுங்கள்.

More News “click here”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments