இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான சிறப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையேற்று பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் பயனாளிகளிடம் 45 மனுக்கள் பெற்று விசாரணை மேற்கொண்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடுத்தார்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி விண்ணப்பித்து 18 வயது பூர்த்தியான பெண் குழந்தைகளுக்கு முதிர்வு தொகை உரிய காலத்தில் வழங்கிட அலுவலர் மற்றும் பணியாளர்கள் செயல்பட வேண்டும். அதேபோல் புதிதாக விண்ணப்பிக்க வருபவர்களுக்கு தக்க வழிகாட்டுதலை மேற்கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமின்றி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நபர்கள் பதிவு செய்யாமல் இருந்தால் அவர்கள் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும். இதே போல் சமூக நலத்துறையின் மூலம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை பயனாளிகளுக்கு கொண்டு போய் சேர்த்திட சிறப்புடன் செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.