Federal Government is about to go down in online sales –Flipkart, Amazon no longer works here.
டெல்லி: ஆன்லைன் விற்பனையில் உலகளாவிய அளவில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக மத்திய அரசும் ஆன்லைன் விற்பனையில் களமிறங்கும் என்று மத்திய சிறு, குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விற்பனை அபரிமிதமான வளர்ச்சியடைந்துள்ளதால் சிறு,குறு, நடுத்தர தொழில் துறையினர் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனையடுத்து அவர்களை காப்பாற்றவே மத்திய அரசு தற்போது ஆன்லைன் விற்பனையை தொடங்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிகவும் மோசமான நிலையில் இருந்து வரும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை சீர்படுத்தி வளர்ச்சி காண மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மத்திய அரசின் புதிய விற்பனை இணையதள அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப வளர்ச்சி
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேரடியாக கடைக்கு சென்றோ அல்லது சூப்பர் மார்கெட் மற்றும் ஷாப்பிங்க மால்களுக்கு சென்றோ வாங்கி வந்த காலம் மலையேறி பலகாலம் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக இருந்த இடத்திலிருந்தே தங்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.
அதிகப்படியான சலுகை
பொருட்களை ஆன்லைனில் விற்பதற்காக அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart), ஸ்நாப்டீல்(SnapDeal) போன்ற ஆன்லைன் விற்பனைக்கான இணையதளங்கள் வந்த புதிதில், வாடிக்கையாளர்கள் யாருமே அவற்றை சீண்டுவாரில்லாமல் இருந்தது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலே இருந்தன. இதனால் இவற்றின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகப்படியான சலுகைகளை வாரி வழங்கின.

அதிரடியான சலுகை
மத்திய அரசு கொடுத்த அதிகப்படியான சலுகைகளால் உற்சாகமடைந்த ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல், அலிபாபா போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் அவ்வப்போது அதிரடியாக பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி தங்களின் விற்பனையை போட்டி போட்டு அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் திருவிழா காலம் மற்றம் விடுமுறை தினங்களுக்கு என அதிரடியான சலுகைகளை அள்ளி வழங்கி விற்பனையை கூட்டி வருகின்றன.
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிப்பு
வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைத்த கதையாக, மத்திய அரசு அளித்த அதிகப்படியான ஊக்கம் மற்றம் சலுகைகளினால் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிலையங்களின் விற்பனை அதிகரித்தவண்ணம் இருந்தன. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைநிற்கும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தியும் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதோடு வேலை வாய்ப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

தனியார் முதலீட்டுக்கு வரவேற்பு
ஆன்லைன் விற்பனை நிறுவனங்களால் நாட்டின் அடிப்படை தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து கொண்ட மத்திய அரசு நடப்பு பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தனியார் துறை முதலீடுகள் வரவேற்கப்படும் என்று அறிவித்தது. மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அதிக சலுகையும் வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
சலுகை அறிவிப்பு
ஏற்கனவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் நாட்டிலுள்ள பெரும்பாலான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலிவை சந்தித்து வரும் வேளையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் அபார வளர்ச்சி அவற்றை மேலும் சிக்கலாக்கியது. இதுபோன்ற சிக்கல்களில் இருந்து அவற்றை மீட்பதற்காகவே மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்ததுள்ளது. இதன் முதல் கட்டமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி உதவும் வகையில் ஆன்லைன் விற்பனைக்கான இணையதளத்தை தொடங்க முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசின் திட்டம்
மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சரான நிதின் கட்காரி, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று லோக்சபாவில் பதிலளித்தார். மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வுகாணும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தப் போவதாகவும் நிதின் கட்கரி லோக்சபாவில் தெரிவித்தார்.