இராமநாதபுரம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முன்னாள் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, அன்பில் மகேஷ், மூர்த்தி, ஐ.பெரியசாமி, ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தேவரின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் சேலத்தில் இருந்து தனி விமானம் மூலமாக திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ வுமான உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு புறப்பட்டுள்ளார். அதன் பின் மதுரையில் இருந்து கார் மூலம் உதயநிதி ஸ்டாலின் பசும்பொன் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துவார்.
முன்னதாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்வதாக திட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக நேற்றுமுன்தினம் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவர் 2 மணி நேரம் பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார். முதலமைச்சர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும், நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் அவர் ஓய்வில் இருப்பதால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை