இராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகல்வித்துறையின் மூலம் நான் முதல்வன்-கல்லூரி கனவு 2022-2023 கல்வியாண்டில் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்லாத மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையேற்று மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியே துவக்கி வைத்தர்
மாணவர்களுக்கான முயற்சி திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மற்ற மாநிலங்களில் இல்லாத புதிய திட்டமான “நான் முதல்வன்” என்னும் திட்டத்தை துவக்கி பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்ல முடியாத உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கான வழிகாட்டுதலை வழங்கி கல்லூரி படிப்பை தொடர்ந்திட இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதற்கு கல்லூரி படிப்பு ஒரு ஏணியாக உயர்த்தும் என்பதை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் இந்த சிறப்பான திட்டத்தை வழங்கி உள்ளார்கள்.குறிப்பாக பள்ளி படிப்பை முடித்ததும் மேற்கல்விக்கு செல்லாமா, அப்படி சென்றால் என்ன படிக்கலாம் அதற்கு என்ன செலவாகும் என பல்வேறு சிந்தனையாலும், குடும்ப வறுமையாலும் பள்ளி படிப்போடு நின்று விடுகிறார்கள். நமது மாவட்டத்தை பொருத்தவரை நடப்பாண்டில் 687 பேர் மேல்நிலை பள்ளி கல்வியோடு நின்று உள்ளதை கண்டறிந்து அவர்களுக்கு விருப்பம் போல் தொழில் கல்வி மற்றும் உயர்க்கல்வி படிப்பிற்கு வழிகாட்டுதலை வழங்கியதுடன், கல்விக்கு தேவையான கட்டண செலவுகளை வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழிகாட்டி நிகழ்ச்சியின் நோக்கம்
இதன் நோக்கம் வரும் காலத்தில் அனைவரும் உயர் கல்வி பெற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்பதே ஆகும். காரணம் இன்றைய தொழில்நுட்ப காலத்தில் உயர்க்கல்வி ஒன்றே ஒவ்வொருவரையும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். அதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. குறிப்பாக ஒருவருக்கு எல்லா வகையிலும் அனுபவங்களும், திறமையும் பணியில் இருக்கும். ஆனால் அதே திறமையும், அனுபவமும் பணி உயர்வுக்கு உறுதுணையாக இருக்காது. ஆனால் அந்த இடத்தில் உயர்கல்வி இருந்தால் அவருக்கு உயர்ந்த இடம் தானாக தேடி வரும். இத்தகைய நிலையை உங்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இந்த முகாமில் தங்களுக்கு தேவையான வருவாய்ச்சான்று, வங்கி கடனுதவி போன்றவற்றை அரசே வழங்கிட தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் , இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அன்னம்மாள் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்யாநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.