இராமநாதபுரத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறையின் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையேற்று பொதுமக்களுடன் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி மேற்கொண்டதுடன் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
வீதி வழியாக பேரணி சென்ற மாணவர்கள்
இப்பேரணி நகரின் மையப்பகுதியான அரண்மனையிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இப்பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று போதை பழக்கத்தினால் ஒரு மனிதனுக்கு எவ்வளவு தீங்குகள் ஏற்படும் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் குடும்பங்களின் முன்னேற்ற தடை போன்றவை குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு பெற்றிடும் வகையில் இப்பேரணி புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை உதவி ஆணையர் மணிமாறன் , குழந்தை பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன் , ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.