புதுடெல்லி: பங்குச்சந்தையில் ரூ.12 கோடி திரட்ட ஐபிஓ வெளியிட்ட எட்டு ஊழியர் ஆட்டோ டீலர், ரூ.4,800 கோடி முதலீடு செய்ய விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது, பங்குச் சந்தை நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொழில் விரிவாக்கத்துக்காக, புதிய பங்கு வெளியீடு வாயிலாக 12 கோடி ரூபாய் திரட்ட, டில்லியைச் சேர்ந்த இருசக்கர வாகன டீலரான ‘சாஹ்னி ஆட்டோமொபைல்’, விண்ணப்பித்து இருந்தது.
இந்நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு ஷோரூம்களிலும் தற்போது எட்டு தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். ‘ரிசோர்ஸ்ஃபுல் ஆட்டோமொபைல்’ என பெயரிடப்பட்ட அதன் பங்கு வெளியீட்டில் 10.25 லட்சம் பங்குகளை ஒரு பங்கின் விலை ரூ.117 விலையில் விற்க நிறுவனம் முன்வந்தது.
ஆக., 22ல் துவங்கி 26ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்தது. பங்குகளை வாங்க, மொத்தம் 419 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள், அதாவது 4,800 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்தது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத்தால் புதிய பங்கு வெளியீட்டிற்கு வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பங்குச் சந்தை வர்த்தகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளன. பங்கு வெளியீட்டை நடத்தும் வங்கியாளர்கள் கூட முதலீட்டாளர்களின் இந்த எதிர்பாராத ஆர்வத்தை விளக்க முடியாமல் திணறினர்.
சிறிய, குறு மற்றும் நடுத்தர பிரிவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு இவ்வளவு எதிர்பாராத விண்ணப்பங்கள் குவிவது இதுவே முதல் முறை.