
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா கமுதக்குடியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் இடிந்து விழுந்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி பழைய சமுதாயக் கூடத்தை உடனடியாக இடித்துவிட்டு புதிதாக சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
இடிந்து விழும் அவலம்
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கமுதக்குடி கிராமத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சமுதாய கூடம் கட்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது இடிந்து விழும் சமுதாய கூடத்தை தான் மக்கள் தங்கள் விசேஷங்களுக்கு ஆபத்தை உணராமல் பயன்படுத்தி வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாய கூடத்தில் தான் கல்யாணம், காதுகுத்து, வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளை அப்பகுதியில் உள்ள மக்கள் எதையும் பொருட்படுத்தாமல் விசேஷ நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
தனியார் மண்டபம் – அதிக பணம்
ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் அதிக பணம் செலுத்தி தனியார் மண்டபங்களில் வைக்க முடியாததால் வேறு வழியின்றி இடிந்த நிலையில் உள்ள சமுதாய கூடத்தில் தான் விசேஷங்களை நடத்தி வருகின்றனர். சமுதாய கூடத்தின் அருகில் தான் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக ஊராட்சி மன்ற கட்டிடத்தில் உள்ள ஊராட்சி செயலாளர் மற்றும் மற்ற கட்டிடங்களில் செயல்படும் அலுவலர்களை சந்திக்க மக்கள் சென்று வருகின்றனர்.
துருப்பிடித்த கம்பிகள் – அச்சத்தோடு மக்கள்
கட்டிடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு அவ்வப்போது மேற்கூரை சிமெண்ட் விழுந்து வருவதால் மேற்கூரையில் உள்ள கம்பிகள் துருப்பிடித்து காட்சி பொருளாக சமுதாயக்கூடம் இருந்து வருவதாக பொதுமக்கள் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தோடு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
முறையாக பராமரிக்காத ஊராட்சி நிர்வாகம்
ஊராட்சி நிர்வாகம் சமுதாயக் கூடங்களை முறையாகப் பராமரிக்காததால், காலப்போக்கில் கட்டிடத்தின் கான்கிரீட் கலவை பெயர்ந்து விழுந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள குழந்தைகள் காலை, மாலை வேலைகளில் இடிந்த நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை சுற்றி தான் விளையாடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடிந்த நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை ஆய்வு செய்து மக்கள் பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிராம மக்கள் கோரிக்கை
எனவே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாய கூடத்தை இடித்துவிட்டு உடனடியாக பொதுமக்கள் நலம் கருதி புதிதாக சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



