Tuesday, December 5, 2023
Homeஆன்மிகம்கூத்தனூர் சரஸ்வதி கோவில் மகிமைகள்

கூத்தனூர் சரஸ்வதி கோவில் மகிமைகள்

கூத்தனூர் சரஸ்வதி கோவில் மகிமைகள்

தனி சந்நதி

ஒட்டக் கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன் + ஊர் = கூத்தனூர் என்றாயிற்று. ஒட்டக் கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சந்நதி உள்ளது.

நீண்ட பாதங்கள்

சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே பூஜிக்கும் வகையில் கருவறையிலிருந்து நீண்ட பாதங்கள் அமையுமாறு அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சி.

புகழ்பெற்ற – கலைஞர்கள்

விஜயதசமி அன்று புகழ்பெற்ற கலைஞர்கள் இத்தலம் வந்து தங்கள் கலைத்திறமையை தேவிக்கு அர்ப்பணிப்பது பாரம்பரிய வழக்கம். கருவறையில் வீணை இல்லாத
சரஸ்வதியை தரிசிக்கலாம். அர்த்த மண்டபத்தில் உற்சவ விக்ரகங்கள் அருள்கின்றன.

வேதம் ஓதும் – நான்முகன்

இத்தல நடராஜரின் பாதத்தின் கீழ் காணப்படும் முயலகன், பக்கவாட்டில் இல்லாமல், நேராக உள்ளது சிறப்பு. மகா மண்டபத்தின் இடது புறம் நான்கு முகங்களுடன் வேதம் ஓதும் நான்முகன் அருள் புரிகிறார்.

மாணவ மாணவியர் – எழுதுகோல்

சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவ மாணவியர் தேர்வு எழுதும் முன் தங்கள் எழுதுகோலை இந்த தேவியின் முன் வைத்து வணங்கி பின்பே தேர்வு எழுத செல்கின்றனர்.
தமிழ்நாட்டிலேயே சரஸ்வதி தேவிக்கு என்றே தனிக்கோயில் உள்ள திருத்தலம் கூத்தனூர்.

கங்கை, யமுனை

சரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தட்சிண திரிவேணி சங்கமாக பரிணமிக்கிறாள் என பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறந்த சரஸ்வதி

ஒரு சமயம் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இருவரும் பூமியில் பகுக்காந்தன், சிரத்தை எனும் பெயர்களில் பிறக்க, சிரத்தையாக பிறந்த சரஸ்வதி இத்தலத்தில் கோயில் கொண்டாள் என ஸ்தலவ ரலாறு கூறுகிறது.

பித்ரு காரியங்கள்

பகுகாந்தனாகப் பிறந்த நான்முகன் பித்ரு காரியங்களில் முக்கியமாகப் போற்றப்படுவார் என ஈசன் அருள் வழங்கியதால் கூத்தனூரில் அரசலாற்றில் புரியும் பித்ரு காரியங்கள் விசேஷ பலன்களைத் தருவதாக உள்ளது.

இரண்டாம் ராஜராஜன்

அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என புராண காலத்தில் அழைக்கப்பட்ட இத்தலத்தை இரண்டாம் ராஜராஜன் தன் சபையில் அரசவைப்புலவராக விளங்கிய சரஸ்வதியின் அருள் பெற்ற ஒட்டக் கூத்தருக்கு பரிசாக வழங்கினார்.

ராஜஹம்ஸம்

விமான கலசம் ஞானத்தின் உருவாய் சரஸ்வதி இங்கு உறைவதைக் குறிக்கும் வகையில் ஐந்து எனும் எண்ணிக்கையில் உள்ளது. கருவறையின் முன் சரஸ்வதியின் வாகனமான ராஜஹம்ஸம் எனப்படும் அன்னம் அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது.

ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே

கம்பருக்காக இந்த சரஸ்வதி கிழங்கு விற்கும் மூதாட்டியாகவும், இடையர் குலப் பெண்ணாகவும் நேரில் வந்து சங்கடங்கள் தீர்த்தவள். ஒட்டக்கூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு, பரணி பாடினால் விட்டுவிடுவதாகக் கூற, கூத்தரின் நாவில் அமர்ந்து பரணி பாடினாள் இந்த அன்னை. தன்னைக் காத்த இந்த சரஸ்வதியை ‘ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே’ என மனதாறப் பாடிப் பணிந்தார் ஒட்டக்கூத்தர்.

தாம்பூல எச்சில்

பிறவியிலேயே பேச்சிழந்த புருஷோத்தமன் எனும் பக்தனுக்கு தன் தாம்பூல எச்சிலைத் தந்து பூவுலகம் போற்றும் புருஷோத்தம தீட்சிதர் ஆக்கிய பெருமை பெற்றவள் இந்த தேவி.

தேனபிஷேகம் – கல்வி அறிவு

பௌர்ணமி அன்று இந்த அன்னைக்குத் தேனபிஷேகம் செய்து அந்த பிரசாத தேனை மோதிர விரலால் சரஸ்வதியை தியானித்தபடி உட்கொள்ள, கல்வியறிவு பெருகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

செல்லும் வழி

மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் எனும் ஊரின் அருகே அரைகிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments