இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் இணை மானிய திட்டத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.20.15 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள் பெறுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டம்
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். இத்திட்டம் ஊரக பகுதிகளில் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் தொழில்மேம்பாடு நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகளை நோக்கமாக கொண்டது. இத்திட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களில் 143 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக இணைமானிய திட்டத்தின் மூலம் புதிய தொழில் செய்யவும், செய்யும் தொழிலை விரிவுபடுத்தவும் திட்ட மதிப்பீடு தொகையில் 30% மானியத்துடன் கூடிய தொழிற்கடன் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் 30% மானியம், அதிகபட்ச மானியமாக ரூ.40 இலட்சம் வரை பெறலாம். தனிநபர், குழு தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் தொழில் கடன் பெறுபவர் பங்களிப்பு தொகை பொது பிரிவினர் 10%, சிறப்பு பிரிவினர்களுக்கு 5% செலுத்த வேண்டும். கடன் பெறுவோர் 21 வயது முதல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் பயன்பெறலாம். மேலும், குழு உறுப்பினர்கள் ஏற்கனவே கடன் பெற்று ஒரு சுழற்சி கடன் திருப்பம் முழுமையாக முடித்திருக்கவேண்டும்.
- விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.tnrtp.org/citizenlogin இணைதளத்தில் விபரங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பத்தினை அந்தந்த ஊராட்சி தொழில்சார் வல்லுநர்களிடம் பெறலாம்.
- மேலும் இணையதள சேவைக்கு இதற்கென இயங்கி வரும் மகளிர் வாழ்வாதார சேவை மையம் (மண்டபம் மற்றும் திருப்புல்லாணி வட்டாரங்களுக்கு தொடர்பு எண்: 7200436477 மற்றும் திருவாடனை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களுக்கு தொடர்பு எண்: 9047708040) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
- மேலும் விபரங்களுக்கு மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டம் அலுவலகம் தொடர்பு எண்: 9486745280 / 8300098120 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு மேற்கண்ட ஊரக பகுதிகளிலுள்ள தொழில் முனைவோர்கள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்
இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட செயல் அலுவலர் குமரன் , செயல் அலுவலர்கள் ராஜபாண்டி, தொழில் நிதி வள்ளுநர் சத்திய சொரூபன் , உதவி பொறியாளர் பிரதீப் , தமிழ்நாடு கிராம வங்கி மேலளார் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.