கால்டாக்சி டிரைவர் விஹான் ஜாலி, தனது காதல் மனைவி சஹானா மற்றும் மகளுடன் வசிக்கிறார். கொரோனா லாக்டவுனால் கால்டாக்சி தொழில் பாதிக்கப்பட்டு, 6 லட்ச ரூபாய்க்கு கடனாளி ஆகிறார். மகளுக்கு முக்கிய ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் டார்ச்சர் செய்கின்றனர்.
சஹானாவின் அழகைப் பார்த்ததும், கடனுக்கு கால அவகாசம் கொடுக்கின்றனர். இதனால் மனம் வெறுத்த விஹான் ஜாலி, நடுத்தர வயதுள்ள பெண்ணைச் சந்திக்கிறார். அப்பெண் பணக்கார முதியவரை கட்டாயத் திருமணம் செய்தவர். குழந்தை பெற்றால் வாரிசு உரிமை பிரச்னை வரும் என்று பணக்காரர் நினைக்கிறார். இதனால் அப்பெண், விஹான் ஜாலி மூலம் குழந்தை பெற நினைக்கிறார். இதற்காக அவருக்கு 6 லட்ச ரூபாய் தருவதாக சொல்கிறார். இதற்கு விஹான் ஜாலி ஒப்புக்கொண்டாரா என்பது மீதி கதை. ஸ்டண்ட் இயக்குனர் ஜாலி பாஸ்டியன் இயக்கியுள்ளார். அவரது மகன் விஹான் ஜாலி,
கால்டாக்சி டிரைவராக நன்கு நடித்துள்ளார். அவரது மனைவி சஹானா, கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், முத்துக்காளை சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர். லாக்டவுனில் கதை நடந்தாலும், யாரும் மாஸ்க் அணியவில்லை. அமெச்சூர்த்தனமான காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் படத்தை பலவீனப் படுத்துகிறது. பி.கே.ஹெச். தாஸ் ஒளிப்பதிவும், ஜாஸி கிஃப்ட் பின்னணி இசையும் படத்துக்கு உதவி செய்யவில்லை.