சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆதிமாதா சுவாதியை முன்னிட்டு உமயபார்வதி சமேத ஆதிமூலநாதருக்கு மகா ருத்ர மகாபிஷேகம் நேற்று மாலை நடந்தது.
கோவிலில் மகாபிஷேகத்தை முன்னிட்டு, 8ம் தேதி தட்சிணாமூர்த்தி சன்னிதியில், கூஷ்மாண்ட ஹோமம், நந்தி பூஜை, நடராஜ அனுக்ஞை, 9ம் தேதி முக்குருணி விநாயகர் சந்நிதியில் மகா கணபதி ஹோமம், 10ம் தேதி காலை நவக்கிரக ஹோமம், தனபூஜை நடந்தது.
நேற்று காலை உமைபார்வதி சமேத ஆதிமூலநாதருக்கு லட்சார்ச்சனை, மகா ருத்ர சங்கல்பம், கடஸ்தாபனம், மகா ருத்ர ஜபம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மதியம் ருத்ர ஹோமம் தொடங்கி வசோதர ஹோமம், மகா தீபாராதனை நடந்தது.
மாலையில் வடுக பூஜை, கன்யா பூஜை, சுகாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை நடந்தது. பின்னர் யாகசாலையில் தீபாராதனை வேதாபரணம். தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, உமயபார்வதி சமேத ஆதிமூலநாதருக்கு மகா ருத்ர மகாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.