அதிகாரிகளின் ஆசியோடு மணல் கொள்ளை : கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பரமக்குடி அருகே உள்ள சிறகிக் கோட்டை வைகை ஆற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருடும் இடங்கள்
பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட வல்லம், கரைமேல்குடியிருப்பு, சிறகிக்கோட்டை, பொட்டிதட்டி, மஞ்சக்கொல்லை, மந்திவலசை, கமுதக்குடி, வல்லம், பகைவென்றி உள்பட வைகை ஆற்று பகுதிகளில் தினந்தோறும் இரவு நேரங்களில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிகாரிகள் அலட்சியம்
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மஞ்சக்கொல்லை சிறகிக்கோட்டை வைகை ஆற்றில் தினமும் இரவு நேரங்களில் ஏராளமான டிராக்டர்கள் மற்றும் டிப்பர் லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
முதல்வருக்கு புகார்
இந்நிலையில், சிறகிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் அப்பகுதி கிராம மக்கள் வைகை ஆற்றுப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டு இதே நிலை தொடர்ந்ததால், இப்பகுதியில் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகவே, இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
போராட்டம்
மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், கிராம மக்கள் அனைவரும் திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறகிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராமு தெரிவித்துள்ளார்.
நம்பர் பிளேட்
மேலும் இப்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமல் 23 டிராக்டர்கள், 2 டிப்பர் லாரிகள் மூலம் இரவு பகல் பாராமல் தொடர்ந்து அதிகாரிகளின் ஆசியோடு மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
காவல்துறை கருப்பு ஆடு
முக்கியமாக காவல் துறையைச் சேர்ந்த அதிகாரியின் டிரைவர் மணல் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
தனது பெயரில் பாதியை நாதன் என பெயர் வைத்துக் கொண்ட இந்த டிரைவரின் வேலை என்னவென்றால், என்றைக்கு யாருக்கு எந்த இடத்தில் பணி போடுகிறார்கள் என்பதை மணல் திருடர்களுக்கு தகவல் சொல்வது.
அதேபோல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தாலும் டிரைவர் மணல் திருடர்களுக்கு தங்கள் கைபேசி மூலம் மெசேஜ் அனுப்பி விடுவார்.
செல்போன் ஆய்வு
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் டிரைவர் மற்றும் மணல் திருடர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தாலே திருடர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தெள்ளத் தெளிவாகி விடும்.
மணல் திருடர்களுக்கு தகவல் சொல்வதற்கு என்று பிரத்யோக செல் நம்பர், செல்போனை மறைத்து வைத்திருக்கும் காவல்துறை கருப்பு ஆடு மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மணல் திருட்டை தடுக்க முடியும் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாரா பார்க்கும் திருடர்கள்
மணல் திருடர்கள் அதிகாரிகளின் வீடுகளுக்கு ஆட்களை பாரா போட்டு கண்காணித்து வருகின்றனர்.
பாரா பார்ப்பவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் ரோட்டோரத்தில் கார்களை நிறுத்தி வைத்துவிட்டு காருக்குள் அமர்ந்து மர்மமான முறையில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் கண்காணித்து வருகின்றனர்.
தகவல்
ஒரு வேளை பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் இரவு நேரங்களில் அதிகாரிகள் தங்கும் வீடுகளில் இருந்து கிளம்பும் போது அங்கு பாரா பார்க்கும் திருடர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மணல் திருடர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
மக்கள் சந்தேகம்
இதனால் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்வதற்குள் திடீரென மணல் திருடர்கள் காணாமல் மறைந்து விடுகின்றனர். காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எந்த பகுதியில் எந்த நபர்கள் மணல் திருடுகிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இது தெரிந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
குண்டர் தடுப்புச் சட்டம்
எனவே அதிகாரிகள் மணல் திருடர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.