அ.தி.மு.க., – பா.ஜ., மேயர் ‘சீட்’ பங்கீடு பேச்சுதொடர்கிறது!
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., – பா.ஜ., இடையே, மேயர் பதவிகள் பங்கீடு பேச்சு தொடர்கிறது. இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இரு கட்சிகளிலும் வார்டுகள் ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உடன்பாட்டை எட்ட, இரு தரப்பினரும் இன்று மீண்டும் பேச்சு நடத்துகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., – த.மா.கா., சமூக சமத்துவப் படை மற்றும் புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி ஆகியோர், நேற்று முன்தினம் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து பேசினர்.
கட்சியினர் பங்கேற்பு
த.மா.கா., தலைவர் வாசன் சார்பில், அக்கட்சி தேர்தல் குழு உறுப்பினர்கள், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து, கடிதம் கொடுத்தனர். அதில், தங்களுக்கு தேவையான வார்டுகளை கேட்டுள்ளனர். ‘த.மா.கா., தேர்தல் குழுவும், அ.தி.மு.க., மாவட்ட செயலர்களும் பேசி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்படும்’ என, அக்கட்சி தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.பெரிய கட்சிகளான அ.தி.மு.க., – பா.ஜ., இடையே, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்.,மாளிகையில் நேற்று பேச்சு நடந்தது.
அ.தி.மு.க., தரப்பில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார், எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் பங்கேற்றனர்.
பா.ஜ., சார்பில் அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டனர்.பிற்பகல் 12:45 மணிக்கு துவங்கிய பேச்சு, மாலை 4:20 மணிக்கு நிறைவு அடைந்தது.பா.ஜ., தரப்பில் சென்னை, கோவை உட்பட சில மாவட்டங்களில், 30 சதவீத இடங்களை கேட்டுள்ளனர். அதற்கு அ.தி.மு.க., தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை.மாநகராட்சிகளில் குறைந்த இடங்களையும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், சற்று கூடுதல் இடங்களையும் வழங்க, அ.தி.மு.க., முன்வந்துள்ளது. ஆனால், பா.ஜ., தரப்பில் தங்களுக்கு செல்வாக்குள்ள உள்ளாட்சிகளில், கூடுதல் இடங்களை வழங்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.
முடிவு எட்டப்படவில்லை
மேலும், சென்னை, கோவை, திருப்பூர், நாகர்கோவில், நெல்லை, துாத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில், அதிக வார்டுகளையும், ஆறு மாநகராட்சி மேயர் பதவிகளையும், பா.ஜ., தரப்பில் கேட்டுள்ளனர். இதற்கு அ.தி.மு.க., ஒப்புக் கொள்ளாததால், இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.
மதிய உணவை துறந்து, பல மணி நேரம் பேசியும், முடிவு எட்டப்படாத நிலையில், இரு தரப்பிலும் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, இன்று பேச்சை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற, அந்தந்த வார்டுகளில் செல்வாக்கான வேட்பாளர்கள் தேவை.
‘தி.மு.க., – அ.தி.மு.க., தவிர வேறு கட்சிகளுக்கு அப்படி வேட்பாளர்கள் இருப்பதில்லை. ஆனாலும், பா.ஜ.,வினர் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். அதனால்தான், 2011 உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டது’ என்றனர்.
பின்னடைவு இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும், வலுவான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க., செயல்படுகிறது. தி.மு.க., அரசின் தவறுகளை, மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் கசப்பு இல்லை.உள்ளாட்சி தேர்தல் பேச்சு தொடரும். அனைத்தும் முடிந்த பின் விபரம் தெரிவிக்கிறோம். பேச்சில் பின்னடைவு, சிக்கல் எதுவும் இல்லை. நல்லபடியாக பேச்சு நடக்கிறது. எங்கள் கருத்துக்களை தெரிவித்தோம்.நகர்ப்புறத்தில் நிறைய இடங்களில், பா.ஜ., வலுவாக உள்ளது. தனியே நின்று சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். அதையும் தெரிவித்தோம். தி.மு.க., நாளிதழில், கவர்னர் குறித்து எழுதியிருப்பது அவதுாறு. கருத்து சுதந்திரத்தை அவர்கள் தாண்டி விட்டனர். மாநிலத்தில் முக்கியமான பதவியில் இருப்பவர் கவர்னர். அவர் அரசியல் சட்டத்தில் உள்ளதை பேசுபவர். நாகாலாந்தில் திறம்பட செயலாற்றி, தமிழகம் வந்துள்ளார்.பல மேடைகளில், தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி உள்ளார். செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் குறித்து பேசி உள்ளார். அப்போது, ‘இது கவர்னர் கருத்தா’ என, தி.மு.க., ஆராய்ச்சிக்கு செல்லவில்லை. கவர்னர் குறித்து அவதுாறு கூறுவதை, அனைவரும் கண்டிக்க வேண்டும். அந்த வகையில் கவர்னரை விமர்சிப்பதை கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிறம் மாறும் பச்சோந்தி!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:பா.ஜ., பிரமுகர்களுடன் நான்கு மணி நேரம் பேச்சு நடந்தது. அவர்கள் சில இடங்களை கேட்டுள்ளனர்; எந்த இடம் கொடுப்பது என்பது, பேச்சில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
கேட்பது அவர்கள் கடமை; ஏற்பது எங்கள் முடிவு. எதை வேண்டுமானாலும் கேட்கலாம். எங்கள் கட்சி நலன் பாதிக்காத வகையில், இடங்கள் வழங்கப்படும்.
தி.மு.க., ஆட்சியில் இருக்கும்போதும், ஆட்சியில் இல்லாதபோதும், மாறி மாறி பேசுவது வழக்கம். பச்சோந்தி போல் நிறம் மாறும் கட்சி. அவர்களுக்கு ஒத்துவராததால், கவர்னரை விமர்சிக்கின்றனர். ஒத்து ஊதினால் கவர்னர் புகழ் பாடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.