இந்திய அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி தேசிய தடுப்பூசி அட்டவணையின் படி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 12 வகையான நோய்களுக்கான தடுப்பூசிகளும் கர்ப்பிணிகளுக்கு Td தடுப்பூசியும் குறிப்பிட்ட தவணைகளில் அளிக்கப்படுகின்றது.
பல்வேறு காரணங்களால் சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட தவணைகளில் தடுப்பூசி அளிக்கப்படாமல் விடுபடுகின்றது. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் அவர்கள் பெற வேண்டிய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு (IMI 5.0) தடுப்பூசி முகாம் நடத்தப்படுகின்றது.
இவ்வாண்டில் Intensified Mission Indradhanush 5.0 தடுப்பூசி முகாம் ஆகஸ்ட்
- 7 முதல் 12 தேதிகளிலும்,
- செப்டம்பர் 11 முதல் 16 தேதிகளிலும் மற்றும்
- அக்டோபர் 9 முதல் 14 தேதிகளிலும் நாடு முழுவதும் நடைபெறுகின்றது.
Intensified Mission Indradhanush தடுப்பூசி முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளில் அவர்கள் தேசிய தடுப்பூசி அட்டவணையின் படி முறையான தவணைகளில் பெற வேண்டிய தடுப்பூசிகள் அளிக்கப்படாமல் விடுபட்டிருந்தால் அவர்களை கண்டறிந்து அவர்கள் பெற வேண்டிய தடுப்பூசிகளை அளிக்கும் பணி நடைபெறுகிறது.
மேலும் இந்தியாவில் டிசம்பர்-2023-க்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் ஒழிப்பை நோக்கமாக கொண்டுள்ளதால் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை, ரூபெல்லா (MR vaccination) தடுப்பூசிகள் குறைந்தபட்சம் 95% அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆதலால் Intensified Mission Indradhanush தடுப்பூசி முகாம்கள் மூலமாக பல்வேறு காரணங்களால் முறையான தவணைகளில் தடுப்பூசி அளிக்கப்படாமல் விடுபட்ட 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கண்டறிந்து தடுப்பூசி அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,13,577 உள்ளனர். அதில் 1845 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் முறையான தவணைகளில் தடுப்பூசி அளிக்கப்படாமல் உள்ளனர். இவர்களுக்கு Intensified Mission Indradhanush தடுப்பூசி முகாம்களின் மூலமாக தடுப்பூசி அளிக்கப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவனைகள் உட்பட 823 மையங்களில் தடுப்பூசி அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி அளித்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.