தேசிய தடகளப் போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவிக்கு எம்.எல்.ஏ முருகேசன் நிதி உதவி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி ஷர்மிளா தேசிய தடகளப் போட்டிக்கு தேர்வு பெற்றதை அறிந்த பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் பாராட்டி நிதி உதவி வழங்கினார்.
12 ஆண்டு கால சாதனை
பரமக்குடி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஷர்மிளா கடந்த மாதம் திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்றார். 20 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 4 கிலோ குண்டு எறிதல் போட்டியில் 14 மீட்டர் தூரம் இருந்து முதலிடம் பிடித்தார். இதில் அவர் 12 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.
தேசிய போட்டிக்கு தேர்வு
இதன் அடிப்படையில் மாநில போட்டியில் வெற்றி பெற்ற ஷர்மிளா நவம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். இந்த போட்டிக்கு தேர்வு பெற்றுள்ள மாணவி ஷர்மிளாவை பாராட்டி பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது.கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி சேதுபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.