பரமக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மத்திய இணை அமைச்சர் நாராயணசுவாமி பார்வையிட்டார்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உரப்புளி, அரியனேந்தல், பொட்டி தட்டி, போகலூர் ஆகிய ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மத்திய இணை அமைச்சர் நாராயணசுவாமி நேரில் பார்வையிட்டார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உரப்புளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட நாற்றாங்கால் பண்ணையில் நாற்றங்கால் அமைக்கும் பணியினை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மத்திய இணை அமைச்சர் நாராயணசுவாமி பார்வையிட்டர்.
உரப்புளி
முன்னதாக உரப்புளி ஊராட்சி மன்ற தலைவர் நாகலெட்சுமி தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அரியனேந்தல் ஊராட்சியில் வாகைக்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 14.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குறுங்காடுகளை பார்வையிட்டார்.
பின்பு ரூபாய் 5.15 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்ட பணிகளை பார்வையிட்டார்.
அரியனேந்தல்
தொடர்ந்து அரியனேந்தல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சிமன்றத் தலைவர் மணிமுத்து, துணைத் தலைவர் பாப்பாசிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான பெண்கள் குலவையிட்டு அமைச்சருக்கு கும்ப மரியாதை செலுத்தி வரவேற்பளித்தனர்.
அமைச்சர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அங்கு கூடியிருந்த பெண்களிடம் மத்திய அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகின்றதா என கேட்டறிந்தார். மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்டங்கள் குறித்து பெண்களிடம் சிறிது நேரம் உரையாற்றினார்.
பொட்டிதட்டி
பொட்டிதட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருடன் உரையாடினார். தொடர்ந்து போகலூரில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார்.
உடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி வட்டாட்சியர் தமீம் ராஜா, பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், சண்முகநாதன், போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லம்மாள், நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் “இலவச கேஸ் இணைப்பு” சிறப்பு முகாம்