இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் முன்னிலையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
தேர்வு செய்யப்பட்ட புதிய திட்டப்பணிகள்
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சிகளில் 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், AGMT-II-ன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஊராட்சி மன்றத்தலைவர்களிடம் கேட்டறிந்தவுடன், ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை அவ்வப்பொழுது முடித்து விட வேண்டும்.
மேலும் நடப்பாட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட புதிய திட்டப்பணிகளை ஒரு வார காலத்திற்குள் பணிகளை துவக்கிட வேண்டுமென ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியதுடன், குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
மேலும் ஊராட்சிகளில் கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் போதியளவு குடிநீர் வழங்க வேண்டும். மேலும் நிலத்தடி நீர் போதியளவு ஆதாரம் இல்லாத ஊர்களுக்கு காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது தனிநபர் வீடு கட்டும் திட்டத்தின் பணிகள் காலதாமதம் ஆவதை தவிர்த்து பயனாளிகளுக்கு அலுவலர்கள் உறுதுணையாக இருந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
குளங்கள் சீரமைத்தல், வரத்து கால்வாய் சீரமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் மற்றும் மயானங்கள் கட்டுதல் பணிகளை அந்தந்த நிதி ஒதுக்கீடு காலத்திலேயே பணிகளை முடித்திட வேண்டும். அதேபோல் ஊராட்சிகளில் முழுமையாக தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு செயல்பட வேண்டும்.
பணிகள் சிறப்பாக நடத்த வலியுறுத்தல்
மேலும் ஊராட்சிகளில் அவ்வப்போது நடைபெறும் கிராம சபை கூட்டங்களை சிறந்த முறையில் நடத்தி பொதுமக்களை முழு அளவில் பங்கேற்க செய்து ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பகிர்ந்து பணிகள் மேற்கொள்ளும் பொழுது அனைவரின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பொதுவாக ஒரு ஊராட்சியில் எத்தகையான திட்டங்கள் தேவை என்பதும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றாக தெரியும். எந்த வகையில் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பது ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தெரியும்.ஒருங்கிணைந்து செயல்படும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். ஊராட்சி மன்றத்தலைவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவிசெயற்பொறியாளர் முருகேசன், இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்குமார், சேவகப்பெருமாள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள்,அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்