Saturday, December 2, 2023
Homeசினிமாஆதிராஜனின் "நினைவெல்லாம் நீயடா" படத்திற்கு இளையராஜா எழுதிய பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடினார்!

ஆதிராஜனின் “நினைவெல்லாம் நீயடா” படத்திற்கு இளையராஜா எழுதிய பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடினார்!

இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார்.

பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர் வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

காலக் கரையான்களால் செல்லரிக்க முடியாத பள்ளிப் பருவக் காதலை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்காக இசைஞானி அசத்தும் ஐந்து பாடல்களை உருவாக்கித் தந்திருக்கிறார்.

கவிஞர் பழநிபாரதி எழுதிய “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற பாடலை பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான கார்த்திக் பாடியிருக்கிறார்.

கவிஞர் சினேகன் எழுதிய மூன்று பாடல்களில், “வண்ண வரைகோல்கள் அவன் முகத்தை” என்ற பாடலை ஹரிப்பிரியா பாடியிருக்கிறார்.

நினைவெல்லாம் நீயடா இளையராஜா

 

“வெச்சேன் நான் முரட்டு ஆசை…” பாடலை கன்னட திரையுலகின் முன்னணி பாடகி அனன்யா பட் பாடியிருக்கிறார்.

“அழகான இசை ஒன்று ….” என்ற பாடலை கார்த்திக் – அனன்யாபட் ஜோடி பாடி இருக்கிறது.

இந்த படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கும் பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது கிறங்கடிக்கும் குரலில் பாடிக்கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி படத்தின் இயக்குநர் ஆதி ராஜன் கூறும்போது,

“இசைஞானியுடன் ஒரு படத்திலாவது பணியாற்றி விடவேண்டும் என்ற என்னுடைய பெருங்கனவு இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது.

பாடல் கம்போஸிங்கின் போது நான் பயந்து கொண்டே இருந்தேன்.

ஆனால் இளையராஜா உனக்கு என்ன தேவை என்று கேட்டு… தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

நினைவெல்லாம் நீயடா இளையராஜா

இப்படத்திற்கு ஒரு பாடலை நீங்கள் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டபோது, உடனே சம்மதித்து “இதயமே இதயமே இதயமே…. உன்னைத் தேடித் தேடிக் கழிந்ததிந்த பருவமே பருவமே பருவமே” என்ற என்ற பாடலை எழுதிக் கொடுத்தார்.

இசைஞானி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார்.

இந்தப் பாடலை யுவன்ஷங்கர்ராஜாபாடினால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசையைத் தெரிவித்தேன்.

அவரும் உடனே யுவனை
அழைத்துப் பாட வைத்தார். மும்பை பாடகி ஸ்ரீஷா இணைந்து பாடியிருக்கிறார்.

யுவனின் மயக்கும் குரலில் பாடல் அருமையாக வந்திருக்கிறது.

சுமார் இருபத்தைந்து வருடங்களில் 150 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா தமிழ்த் திரையுலகில் பட்டையைக் கிளப்பும் பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

1989ல் “தென்றல் சுடும்”என்ற படத்திலிருந்து பாடி வருகிறார்.

இதுவரை 150 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அவர் பாடினாலே அந்த பாட்டு சூப்பர் ஹிட்டு தான் என்பதை சமூக வலைத்தளங்கள் சமரசம் இன்றி சத்தியம் செய்து கொண்டிருக்கின்றன.

இளைஞர்களும் இளம் பெண்களும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக யுவனின் குரலுக்கு மயங்கிக் கிடக்கிறார்கள்.

சமீப காலங்களில் அவர் பாடிய என் காதல் சொல்ல தேவையில்லை, காதல் ஆசை யாரை விட்டதோ, விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் அந்த கண்ண பார்த்தாக்கா, அஜித்குமாரின் “வலிமை” படத்தில் இடம் பெற்ற “நாங்க வேற மாதிரி…” உள்ளிட்ட பல பாடல்கள் யூடியூபில் 47 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

அந்தளவு யுவனின் குரலுக்கு இளைஞர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் சக்தி இருக்கிறது.

அதேபோல இளையராஜா இசையில் பாடிய சாய்ந்து சாய்ந்து பாடலும் பலமில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

இசைஞானியின் இசையில் பல பாடல்களை யுவன்சங்கர் ராஜா பாடியிருந்தாலும் இளையராஜா எழுதிய ஒரு பாடலை யுவன் பாடியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஜன், சினாமிகா நடனமாடும் இப்பாடலை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா வடிவமைக்கிறார்.

கண்டிப்பாக இந்த பாடல் பல மில்லியன் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடிக்கும் என்பது உறுதி.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது.” என்று இயக்குநர் ஆதிராஜன் குறிப்பிட்டார்.

 

Read this || 3 நாளில் யூட்யூப்பில் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ‘அரபிக்குத்து ‘ புதிய சாதனை படைத்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments