Tuesday, June 6, 2023
Homeஆன்மிகம்ஓதிமலை முருகன் கோவில் சிறப்புகள் || OthiMalai Murugan Temple

ஓதிமலை முருகன் கோவில் சிறப்புகள் || OthiMalai Murugan Temple

ஓதிமலை முருகன் கோவில் சிறப்புகள்

முருகப்பெருமான் வீற்றிருக்கும் பல ஆலயங்களும் மலைமேல் அமைந்ததுதான். ஆனால் இந்த ஓதிமலைதான், முருகப்பெருமான் அருளும் மலைகளிலேயே மிகவும் உயரமான மலை.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது ஓதிமலை முருகன் கோவில். முருகப்பெருமான் வீற்றிருக்கும் பல ஆலயங்களும் மலைமேல் அமைந்ததுதான். ஆனால் அவை அனைத்தும் குன்று என்னும் சிறிய மலைகளாகவே இருக்கும். ஆனால் இந்த ஓதிமலைதான், முருகப்பெருமான் அருளும் மலைகளிலேயே மிகவும் உயரமான மலை.

இது சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலையாகும். இந்த மலையில் ஏறி, முருகப்பெருமானை தரிசனம் செய்ய நாம், ஆயிரத்து 800 படிகளை கடந்து செல்ல வேண்டும். இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

தல வரலாறு

படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனுக்கு, உயிர்களின் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை.

இதனால் அவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு பிரம்மன் செய்து வந்த படைப்புத் தொழிலை தானே மேற்கொண்டார். அப்படி அவர் தனது படைப்புத் தொழிலை செய்வதற்காக தேர்வு செய்த இடம், இந்த ஓதிமலை என்று தலவரலாறு சொல்கிறது.

படைப்புத் தொழிலை செய்து வந்த காரணத்தால், இந்தல முருகப்பெருமானுக்கு, நான்முகனின் நான்கு முகங்களோடு சேர்த்து மொத்தம் ஐந்து முகங்கள் உண்டு.

ஐந்து முகத் தோற்றத்தில் அருளும் முருகப்பெருமானை வேறு எந்த தலத்திலும் காண முடியாது என்பது, இந்த ஆலயத்திற்கு கூடுதல் சிறப்பு.

முருகப்பெருமான் படைப்புத் தொழிலை செய்துவந்த காலகட்டத்தில், அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் உண்டானது. பூமாதேவி தவித்துப் போனாள். பிறப்பும், இறப்பும் சமமாக இருந்தால்தான், உலக இயக்கம் முறையாக இருக்கும் என்பது நியதி. எனவே தேவர்கள் அனைவரும் இதுபற்றி சிவபெருமானிடம் முறையிட்டனர்.

அவரும் முருகப்பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப்பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே இந்த மலைக்கு ‘ஓதிமலை’ என்று பெயர் வந்ததாக, காரணப் பெயர் கூறப்படுகிறது.

பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் ‘இரும்பறை’ என்று அழைக்கப்பட்டது. அது இந்த ஓதி மலைக்கு அருகிலேயே இருக்கிறது. இரும்பறை என்பது மருவி இரும்பொறை என்று அழைக்கப்படுகிறது.

ஆலய அமைப்பு

ஓதிமலை மீது வீற்றிருக்கும் முருகனைக் காண, அடிவாரத்தில் உள்ள சுயம்பு விநாயகரை முதலில் வழிபட வேண்டும். ஓதிமலையில் இருந்து படைப்புத் தொழிலை செய்து வந்த முருகனை சந்திப்பதற்காக, தனியாகத்தான் அங்கு ஈசன் வந்தார்.

அதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள சிவன் சன்னிதியில் ஈசன் மட்டுமே தனியாக இருக்கிறார். அம்பாளுக்கு சன்னிதி அமைக்கப்படவில்லை. ஆனால் மலையின் மேல் பகுதியில் காசிவிஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் பக்தர்களுக்கு அருள்கின்றனர்.

எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், இத்தல முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு செய்வது வழக்கமாக இருக்கிறது. தொழில் மட்டுமல்லாமல், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்வதாக இருந்தாலும் பூ போட்டு கேட்கும் வழக்கம் இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையவும் இத்தல முருகப்பெருமானை வேண்டிக்கொள்ளலாம்.

இந்த ஆலயத்தில் சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதே போல் திங்கள், வெள்ளி, அமாவாசை நாட்களிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற விசேஷ தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் ஆலயத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து விட்டுச் செல்வதே நல்லது.

அமைவிடம்

கோவை மற்றும் திருப்பூரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டரில் உள்ளது இரும்பொறை. இங்கிருந்து 6 கிலோமீட்டர் சென்றால் ஓதிமலையை அடையலாம். புளியம்பட்டி சென்று, அங்கிருந்தும் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓதிமலை முருகன் கோவிலுக்குச் செல்லலாம்.

போகருக்கு வழிகாட்டிய முருகன்

பழனி மலையில் போகர் செய்தருளிய நவபாஷாண சிலையே தற்போது வழிபாட்டில் உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக பழனி மலைக்கு வருகை தந்த போகருக்கு, பழனி திருத்தலத்திற்குச் செல்லும் சரியான பாதை தெரியவில்லை.

அவர் ஓதிமலை திருத்தலத்திற்கு வந்து, அத்தல முருகனை வழிபட்டு தனக்கு வழிகாட்டும்படி வணங்கி நின்றார்.

அப்போது இந்த ஆலயத்தில் இருந்து ஒரு தலையோடு வெளிப்பட்ட முருகப்பெருமான், போகருக்கு பழனி மலைக்குச் செல்லும் வழியைக் காட்டி அருளினார்.

அப்படி வழிகாட்டிய அந்த முருகப்பெருமான், ஓதிமலையில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கிறார்.

ஆதி காலத்தில் ஓதிமலை முருகன், ஆறு முகங்களுடன் காட்சியளித்ததாகவும், சித்தர் போகருக்கு வழிகாட்டுவதற்காக ஒரு முகத்துடன் சென்று குமாரபாளையத்தில் அமர்ந்துவிட்டதால், ஓதிமலையில் ஐந்து முகத்தோடு காட்சியளிப்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள் || ஆண்களுக்கு திருமண தடை நீங்க இந்த பரிகாரத்த செய்ங்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments