கமுதியில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவர் தமிழ்செல்விபோஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். மணிமேகலை, எம்.ராஜகோபாலன் (கிராம ஊராட்சிகள்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
உறுப்பினர் கனகரசி:
அபிராமம் அடுத்துள்ள நியாயவிலைக் கடையை சுற்றி, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, நியாய விலைக்கடையை சுற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.
கோரிக்கைகள்
கா.அன்பரசு:
சாமிபட்டிகிரா மத்தில், ஆழ்துளைக் கிணறு, குளியல் தொட்டி பேவர் பிளாக் சாலை ஆகியவை அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை. சேர்ந்தகோட்டை கிராமத்தில், காவிரி குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. வேளாண் துறை, மின் வாரியத்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த புகார்களை கூட்டத்தில் தெரிவித்தும் பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் காலங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்பூர சுந்தரபாண்டியன், கள்ளிகுளம் கிராமத்தில் மயானத்தைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதி செய்து தர வேண்டும்.
தலைவர் தமிழ்ச்செல்வி போஸ்:
போதிய நிதி இல்லாததால் மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண இயலவில்லை. இருப்பினும் ஓரளவுக்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய பொது நிதி, மாவட்ட ஊராட்சி முகமை நிதி ஆணையத்திலிருந்து வழங்கப்பட வேண்டிய நிதி ஆகியவை முறையாக ஊராட்சி ஒன்றியத்துக்கு வரவில்லை. எனவே, நிதி நிலைமை சீரான பின்னர், உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்