Home செய்திகள் பரமக்குடியில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

பரமக்குடியில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

0
3

பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை திடீரென பெய்த மழை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களாக பரமக்குடி பகுதியில் கடும் வெப்பம் நிலவி வந்தது. காலை முதலே சூரியன் கொதித்தெரித்ததால் மக்கள் வெளியே செல்வதே கடினமாக இருந்தது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன. வெயிலின் தாக்கம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும் சில பகுதிகளில் அதிகரித்து வந்தது. விவசாயிகளும் மழையை எதிர்நோக்கி கவலையுடன் இருந்தனர். இந்த நிலையில், இன்று காலை சுமார் 07.30 மணி அளவில் திடீரென மேகங்கள் திரண்டு, பரமக்குடி நகரம் முழுவதும் சூழ்ந்தன. ஆரம்பத்தில் தூறல் மழையாக தொடங்கிய மழை, சில நிமிடங்களில் சற்று பலமாக பெய்தது. சுமார் அரை மணி நேரம்  மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை பெய்யத் தொடங்கியவுடன் சாலைகளில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் நின்று ரசித்தனர். சிலர் குடை இல்லாமல் மழையில் நனைந்தபடி சென்றனர். வெயிலில் இருந்து விடுதலை என பேசியவாறு இளைஞர்கள், குழந்தைகள் மழையில் விளையாடி மகிழ்ந்தனர். இத்தனை நாளாக காத்திருந்த மழை இது தான் என்று மகிழ்ச்சியுடன் மக்கள் தெரிவித்தனர்.

மழைக்குப் பிறகு பரமக்குடி நகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. வெப்பநிலை தாறுமாறாக குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர். மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை,  முத்தாலம்மன் கோவில் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்தது. வழக்கமாக காலை நேரத்தில் சோர்வாக இருந்த சூழல், மழைக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் மாறியது. சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், அது மக்களின் மகிழ்ச்சியை குறைக்கவில்லை. சில நாட்களுக்கு இப்படி மழை தொடர்ந்தால் தான் நிலைமை சீராகும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். இந்த மழை விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களில் நீண்ட நாட்களாக மழை இல்லாமல் இருந்ததால் நிலம் உலர்ந்த நிலையில் காணப்பட்டது. இன்றைய மழை காரணமாக நிலத்தில் ஈரப்பதம் உருவாகியுள்ளதால், கோடை விதைப்பு பணிகளை தொடங்கலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மழை நீரால் கிணறுகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் உயர வாய்ப்புகள் அதிகம்.

பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வந்தது. டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெய்த இந்த மழை, தற்காலிகமாக குடிநீர் பிரச்சனையை ஓரளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப் பெய்யும் மழையை வீணாக்காமல் சேமித்தால், எதிர்கால தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும். மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இன்றைய மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், இது தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வானிலை மாற்றம் காரணமாக இதுபோன்ற திடீர் மழைகள் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில், பரமக்குடியில் திடீரென பெய்த இந்த மழை, வெயிலால் வாடிய மக்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.