இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 21 பயனாளிகளுக்கு ரூ.7.69 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களிடம் 297 மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், உத்தரவு பிறப்பித்தர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 297 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ரூ.5.90 இலட்சம் மதிப்பீட்டில் 06 பயனாளிகளுக்கும் மற்றும் வருவாய்த்துறையின் மூலம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியின் கீழ் சாலை விபத்தில் காயமடைந்த 03 நபர்களுக்கு உயிர் சிகிச்சைக்காக தலா ரூ.50,000/- த்திற்கான காசோலையினையும், தாட்கோ மூலம் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் தூய்மை காவலர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகையாக 12 மாணவிகளுக்கு ரூ.29,250/- க்கான காசோலையினையும் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.7,69,250/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) அபிதா ஹனிப் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் , மாவட்ட மேலாளர் தாட்கோ தியாகராஜன் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.