இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கோரிக்கை மனு அளித்தல்
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 262 மனுக்களை பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அறிக்கை
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.