தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் பன்றிகள் தொல்லை.
பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், தெளிச்சாத்தநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் பன்றிகள் சுதந்திரமாக உலா வருவதாகவும் பன்றி தொல்லையிலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கில் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
24 மணி நேரம் – பன்றிகள் தொல்லை
தெளிச்சாத்தநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வளையனேந்தல், கனி நகர், மூவேந்தர் நகர், நேரு நகர், சக்தி நகர், சிட்கோ, திருநகர், வி.ஒ.சி நகர், நிலா நகர், தெளிச்சாத்தநல்லூர், சோமநாதபுரம் ஆகிய பகுதிகளில் 10000 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மொத்தம் இப்பகுதியில் 89 சாலைகள் உள்ளது. இந்த சாலை ஓரங்களில் 24 மணி நேரமும் பன்றிகள் தெருக்களில் உள்ள குப்பைகளை கிளறி விட்டு தெருவை நாஸ்தி பண்ணி வருகிறது.
பன்றிகள் சண்டை – மக்கள் அச்சம்
தெருவோரங்களில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளை சாப்பிடும்போது பன்றிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு சண்டையிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல கூடிய மாணவர்கள், நடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடித்து, காயப்படுத்தி – விபத்து
தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை பன்றிகள் திடீரென வந்து பாய்ந்து கடித்து காயப்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி வருவதாகவும் இதனால் எதிர்வரும் வாகனங்களில் முட்டி விபத்து ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தெருவில் புழுக்கள்
தெருவோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை பன்றிகள் கிளறி விடுவதால் குப்பையில் உள்ள புழுக்கள் தெருக்களில் அங்குமிங்கும் நெளிந்தும், சுருண்டும் கிடப்பதால் வீட்டைவிட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வருவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வீடுகளுக்கு பூட்டு
சுமார் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டமாக தெருக்களில் தேங்கி கிடக்கும் சாக்கடை தண்ணீரில் படுத்துக்கிடந்து விட்டு அப்படியே திறந்து கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் வீடுகளில் உள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து விடுகின்றனர். இதனால் 24 மணி நேரமும் மக்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
தொற்றுநோய் – அபாயம்
தெருக்களில் உலா வரும் பன்றிகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களை நோய்களிலிருந்து காக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதே நிலைமை நீடித்தால் ஊராட்சியில் வசிக்கும் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறுகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் – நடவடிக்கை
எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படியுங்கள் || இரவில் சீக்கிரமாக தூங்க ராணுவத்தில் பயன்படுத்தும் இந்த வழிய ட்ரை பண்ணுங்க