பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் இந்தியாவிலுள்ள, தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது.
இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது.
இக்கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.
குகைக்கோயிலில், சிவன் மற்றும் பிற கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆகம கல்வெட்டுக்களில் எழுதியுள்ளபடி இக்கோயில், 1091 மற்றும் 1238ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.
தல வரலாறு
குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கோயில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.
பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு.
ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில் என்பதை அறியலாம்.
4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது.
மேலும், கல்வெட்டுகள் மூலமாக, எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் போன்றவை இத் தலத்தின் முற்காலப் பெயர்கள் என அறிய முடிகிறது.
இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது.
இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்.
கோயில் அமைப்பு
கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது.
கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது.
பிள்ளையார்பட்டி கோயில், தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமையப்பெற்றுள்ளதால், இங்கு சன்னதியை வலம் வர இயலாது.
பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது.
இங்கு திருமணம் நடைபெற வைக்கும் “கார்த்தியாயினி” அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்கும் “நாகலிங்கம்” சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் “பசுபதீசுவரர்” சன்னதியும் உள்ளது.
குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது.
திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.
இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி.
சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார்.
இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது.
காலத்தால் இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.
முக்கிய திருவிழாக்கள்
இத் தலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் பெருவிழாவாக உள்ளது.
முதல் நாள் விழா கோயில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து “காப்பு கட்டுதல்” மற்றும் விழா தொடர்பான நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது.
இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.
அன்றைய தினம் பிள்ளையாருக்கு “சந்தன காப்பு” அலங்காரம் செய்யப்படுகிறது. இந் நிகழ்ச்சி பக்தர்களிடையே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும். மேலும், கார்த்திகை மாதத்தில் “திருக்கார்த்திகை தீபத் திருவிழா”, மார்கழி மாத திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருதல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேட பூசை போன்றவை நடைபெறுகின்றன.
Also read || ஆன்மீக விழிப்புணர்வு வழிகாட்டும் தியானம்