ராமநாதபுரம் ஆன்மிகமும் சுற்றூலாவும்
புகழ்பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதன் வரலாற்று மற்றும் ஆன்மிக சிறப்புகள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
புராண கால வரலாறு
இந்தியாவின் புராணகால வரலாற்றில், ராமநாதபுறம் மாவட்டத்துக்கு தனிச்சிறப்பும், வரலாறும் உள்ளது. ராமாயணத்தில் ராமன், ராவணனை வதம் செய்து திரும்பி பின் தான் பாவத்தைக் கழிக்க ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கடற்கரைப் பகுதியில் மணலால் ஆன சிவ பெருமானின் லிங்கத்தை உருவாக்கினார்.
அந்த இடம்தான் தற்போது ராமேஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
15ம் நூற்றாண்டின் முற்பாதியில் இந்த பக்குதியை பாண்டிய மண்ணர்கள் ஆண்டதாக வரலாறு கூறுகிறது.
அதன்பின் சேதுபதி மன்னர்கள் ஆளுகைக்கு கீழ் வந்தது. அவர்களுக்கு பின் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் இந்த பகுதியை ராம்நாட் என்று அழைக்கத் தொடங்கி அதுவே ராமநாதபுரம் என்று மாவட்டத்துக்கே பெயரிடப்பட்டது.
ராமநாதபுரத்தின் ஆன்மீக பகுதிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உலக புகழ் பெற்றது.
அதேபோல் அக்னி தீர்த்தம், உத்திரகோச மங்கை, ஏர்வாடி தர்கா, திருப் புல்லாணி, தேவிப் பட்டினம், ஜடாயு தீர்த்தம், ஜோதி லிங்கம், வில்லுன்டி தீர்த்தம், பத்ரகாளியம்மன் கோவில் ஆகியனவும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும்.
ராமநாத சுவாமி கோவில் சிறப்புகள்
ராமநாதபுரத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் தான் ராம நாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
ராமநாத சுவாமி கோவிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான இந்திய பயணிகளும், ஆயிரங்களில் வெளிநாட்டு பயணிகளும் வருகை தருகின்றனர்.
ஜோதிர் லிங்கங்களில் இதுவும் ஒன்று. ராமநாத சுவாமி கோவிலில் தனியாக சிலை இல்லை. இங்கு சிவ பெருமான் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
ராமநாத சுவாமி கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமைக்கு சொந்தமானது.
எப்படி செல்வது?
சென்னை, கோவை, கன்னியாகுமரி என மூன்று புறங்களிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு செல்ல ரயில்களும், பேருந்து சேவைகளும் இருக்கின்றன.
விமான பயணம் என்றால் தூத்துக்குடி அல்லது மதுரைக்கு வந்து அங்கிருந்து பேருந்து அல்லது ரயிலில் மூலம் ராமநாதபுரம் வரலாம்.
மதுரையிலிருந்து செல்ல தொலைவு – 172கிமீ
பயணநேரம் – 3 முதல் 4 மணிநேரம்
நம்பு நாயகி அம்மன் கோவில்
ராமநாதபுரத்தில் மற்றொரு பிரசித்திபெற்ற கோவில், நம்பு நாயகி அம்மன் கோவில். தசரா விழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.
ராமேஸ்வரத்திலிருந்து 3 கிமீ தொலைவில் தனுஷ்கோடி செல்லும் வழியில் நம்பு நாயகி அம்மன் கோவில் வந்துவிடும்.
அக்னி தீர்த்தம்
ராமநாத சுவாமி கோவிலுக்கு வெளியில் இருக்கும் முதல் தீர்த்தம் அக்னி தீர்த்தமாகும்.
அக்னி தீர்த்தம் கடலுக்கு மிக அருகிலேயே உள்ளது. இது ராமர் குளித்த தீர்த்தம் என்று நம்பப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் குளித்தால் நீங்கள் இதுவரையில் செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என நம்பப்படுகிறது.
உத்திரகோச மங்கை கோவில்
இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் சிவ பெருமானுக்கான கோவிலான உத்திரகோசமங்கை ஒவ்வொரு வருடமும் சைவப்பிரிவினை சேர்ந்தவர்களை பெருமளவில் வரவழைக்கும் சுற்றுலா தலமாகும்.
உத்திரகோச மங்கை கோவிலை பரமக்குடி மற்றும் இராமநாதபுரத்திலிருந்து எளிதில் அடைய முடியும்
சேது மாதவ தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் மற்றும் இராமநாதபுரம் போலவே இந்த புனிதத்தலமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உத்திரகோச மங்கை கோவில் நாடு முழுவதுமுள்ள இந்துக்களால் மிகவும் போற்றப்படும் இடமாக விளங்குகிறது.
இந்த கோவில் வளாகத்தில் மிகவும் பழமையான மரகத நடராஜர் சிலையொன்றும் உள்ளது. இந்த நடராஜர் சிலையின் சிறப்பு அது முழுமையும் மரகதத்தால் செய்யப்பட்டிருப்பது தான்.
ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் ஆருத்ரா திருவிழா மிகவும் புகழ் பெற்றது.
இந்த காலகட்டத்தில் தான் பெரும்பாலான சிவ பக்தர்கள் இங்கு வந்திருந்து, கடவுளின் அருள் பெற்று வருகிறார்கள்.
மேலும், சுற்றுலாப் பயணிகளும் கூட இந்த காலகட்டங்களில் நடக்கும் விழாக்கோலத்தை அனுபவிக்க இங்கு வருவார்கள்.
கோதண்ட ராமர் கோவில்
இராமேஸ்வரத்திலுள்ள கோதண்டராமர் கோவில் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மத முக்கியத்துவம் இரண்டையும் ஒருங்கே பெற்ற புனிதத்தலமாகும்.
இந்த இடத்தில் தான் இராவணனின் தம்பியும், இராவணனை கொன்ற பின்னர் இலங்கையின் மன்னனாகவும் இருந்த இருந்த விபீஷணருக்கு இராமர் ஆறுதல் வழங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வுக்கு சான்றாக இக்கோவில் சுவற்றிலிருக்கும் ஓவியத்தை சொல்லலாம்.
ராமஸ்வரத்திலிருந்து தனுஷ் கோடி செல்லும் வழியில் 10 கிமீ தொலைவில் தனுஷ்கோடியை ஒட்டியே இந்த இடமும் அமைந்துள்ளது.
கோதண்டராமர் கோவிலில் இருந்து நடந்தே தனுஷ்கோடி பீச்சுக்கு சென்றுவிட முடியும்.
காந்தமதனா பர்வதம் ராமர் பாதம் கோவில்
காந்தமதனா பர்வதம் என்பது இராமநாதசுவாமி கோவிலிற்கு வடக்கில் உள்ள சிறிய மலைப்பகுதியாகும்.
3 கிமீ தொலைவில், நடந்து சென்று அடையக்கூடிய வகையில் உள்ள இந்த இடம், இராமேஸ்வரத்தின் மிகவும் உயரமான இடமாகும்.
காந்தமதனா மலையின் உச்சியில் ராமர் பாதம் என்றழைக்கப்படும் கோவில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
இந்த காந்தமதனா பர்வதம் செல்லும் வழியில் உள்ள ஒரு இரண்டடுக்கு வளாகத்தில், இராமருடைய பாதம் ஒரு சக்கரத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
காந்தமதனா மலைக்கு செல்லும் வழியில் உள்ள கோவில் உள்ள இடத்தில் தான், இராவணன் சீதையைக் இலங்கைக்கு கடத்தி சென்ற போது தடயத்திற்காக சீதை எறிந்த அணிகலனை அவரைத் தேடி வந்த அனுமான் கண்டெடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.
இராமேஸ்வரம் தீவின் மனம் மயக்கும், கம்பீரமான தோற்றத்தைக் காட்ட வல்ல இந்த தீவிற்கு சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.
ராமநாதசுவாமி கோவிலுக்கு வடக்கு திசையில் நடந்து சென்றால் 2 கிமீ தூரத்தில் கண்டமதன பர்வதம் வருகிறது. இது மலை ஏற்றத்துக்கு உரிய ஒரு சிறிய பகுதி ஆகும்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
ஐந்து முகங்களையுடைய அனுமான் கோவில் இராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலிற்குப் பின்னர் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் இராமர், அவருடைய துணைவியார் சீதா தேவி மற்றும் அனுமனின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலின் மற்றுமொரு முக்கிய அம்சம் இந்த கோவிலுக்கு வெளியிலிருக்கும் மிதக்கும் கல்லாகும்.
இராவணன் வசித்து வந்த இலங்கை செல்வதற்காக அனுமான் மற்றும் பிற வானர இராணுவ வீரர்களால் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதியாகவே இந்த கல் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அனுமான் தன்னுடைய ஐந்து முகங்கள் அல்லது ஐந்து வித வடிவங்களையும் காட்டிய இடமாக இந்த இடம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
இங்குதான், இராமர் அனுமனுக்கு செந்தூர பொட்டினை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
சாட்சி அனுமான் கோவில்
புராணங்களின் படி, அனுமான் தான் சீதாவைக் கண்டுபிடித்த நல்ல செய்தியை இவ்விடத்தில் வைத்து தான் ராமரிடம் சொன்னார்.
இந்த இடத்தில் அனுமான் தான் கொண்டு வந்திருந்த ‘சாட்சி’களான சீதா தேவியின் சூடாமணி அல்லது ஆபரணங்களை வைத்து இந்த செய்தியை இராமரிடம் கூறினார்.
மேலும், இந்த செய்தியை கேள்விப்பட்ட ராமர் தன்னுடைய மனைவி உயிருடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியால் அழுததாகவும் நம்பப்படுகிறது.
இந்த இடத்தில் தான், கடுமையான சோதனைகள் மற்றும் துன்பங்களுக்கிடையில் சீதாவை கண்டறிந்து வரச் சென்ற அனுமானை தன்னுடைய உண்மையான ‘பக்தர்’ என இராமர் கூறினார்.
இந்த கோவிலுக்கு இராமர் மற்றும் அனுமானின் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து செல்வார்கள். பல்வேறு சுற்றுலாப் பயணிகளும் காந்தமதனா பர்வதம் செல்லும் வழியில் இங்கு இறங்கி தங்களுடைய பிரார்த்தனைகளை நடத்திச் செல்கின்றனர்.
அனுமானை வழிபடுவதற்கு சிறந்த நாளாக கருதப்படும் செவ்வாய் கிழமைகளில், இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவிலேயே, காந்தமதனா பர்வதம் செல்லும் வழியல் சாட்சி அனுமான் கோவில் உள்ளது.
அரியமான் கடற்கரை
சுற்றுலா வருவதை மட்டுமே பொழுது போக்காக கொண்டிருக்கும் இராமேஸ்வரம் பகுதி மக்களில் பெரும்பாலோனோர் அடிக்கடி வந்து செல்லும் கடற்கரையாக இது உள்ளது.
அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் தங்களுடைய வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான மக்கள் வரும் கடற்கரையாகவும் அரியமான் கடற்கரை உள்ளது.
நீலக்கடல் நீர் மின்னுவதாகவும், நாள் முழுவதும் அமைதியாகவும் இருக்கக் கூடிய அழகிய கடற்கரையாக அரியமான் கடற்கரை உள்ளது.
நாள் முழுவதும் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரை சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.
இராமநாதசுவாமி கோவிலிலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள இந்த கடற்கரை 150மீ அகலமும், 2 கிமீ நீளமும் உடையதாகும்.
அரியமான் கடற்ரையின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனர், சவுக்கு மரங்களை கடற்கரையில் நட்டுள்ளார்.
மேலும் குழந்தைகள் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி, செயற்கை இடிமின்னல், நீர்ச்சறுக்கு மற்றும் இதர விளையாட்டுகளையும் இங்கு ஏற்படுத்தியுள்ளார்.
சுற்றுலா செல்பவர்களின் சுற்றுப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிடவே இந்த வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.
ராமலிங்க விலாஸ் அரண்மனை
கிழவன் சேதுபதி என்பவர் வாழ்ந்த அரண்மனை ராம லிங்க விலாஸ் ஆகும். ராமலிங்க விலாஸ் அரண்மனையில் கூடி மக்கள் தங்கள் சிக்கல்களை கூற மன்னர் அவற்றை தீர்க்க முயற்சிப்பார் என்று கூறுகிறார்கள்.
அரண்மனை சுவர்களில் அழகழகான ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இவை மன்னரின் குடும்ப வாழ்க்கையை சித்தரிக்கின்றன.
ராமநாதபுரம் முகவாய் ஊரணிக்கு அருகே, சாலைத் தெருவுக்கு முன் லக்ஸ்மி புரம் பகுதியில் அமைந்துள்ளது ராம லிங்க விலாஸ் எனும் அழகிய அரண்மனை.
வாடகை வண்டிகள், ஆட்டோ எனப்படும் தானிக்கள் உட்பட போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.
நீர் பறவை சரணாலயம்
இராமநாதபுரத்தில் உள்ள நீர்ப் பறவை சரணாலயம் எல்லா பறவை பிரியர்களையும் கவரும் சரணாலயமாகும்.
நீர் பறவை சரணாலயத்தில் உள்ளூர் மற்றும் இடம் பெயரும் வகை பறவைகள் பலவற்றையும் காண முடியும்.
இங்கு காணப்படும் உள்ளூர் பறவைகள் வருடம் முழுவதுமே உணவிற்காக இந்த சரணாலயத்திற்கு வருகை தரும்.
ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இடம் பெயரும் பறவைகள் பெருமளவில் இந்த சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
வழக்கமாக இந்த பறவைகள் வடகிழக்கு பருவக்காற்று காலத்திலேயே இங்கு வருகை தருகின்றன. நீர் பறவை சரணாலயத்தில் அரியவகை மற்றும் தனித்தன்மையான பறவைகளை நீங்கள் காண முடியும்.
உலகம் முழுவதும் உள்ள பறவை பிரியர்கள் குறிப்பிட்ட காலங்களில் இங்கு வந்து தங்கி இங்கிருக்கும் பறவைகளின் குணாதிசயங்களை கவனித்து செல்கின்றனர்.
பறவைகள் தங்களுக்கு பிடித்தமான இடங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு வந்து செல்லும். அந்த இடங்களை இங்குள்ள அதிகாரிகளும் சுற்றுலா வசதிக்காக குறிப்பிட்டு வைத்திருப்பார்கள்.
நாம் அதன் மூலம் எளிதாக பறவைகளை அடையாளம் காணமுடியும். இந்த இடங்களில் தான் பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும்.
இந்த சரணாலயத்திற்கு வரும் போது உங்களுடைய பைனாகுலர்களை மறவாமல் எடுத்துக்கொள்ளுங்கள்.
சீசன் நேரம் என்ன?
பறவைகள் சரணாலயத்தில் வழக்கமாக அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெருவாரியான பறவைகள் வந்து குவியும்.
எனவே அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் இங்கு சுற்றுலா செல்பவர்கள் பறவைகளையும் கண்டு ரசிக்கமுடியும்.
தனுஷ்கோடி
இராமேஸ்வரம் தீவில் உள்ள ஒரு கிராமம் தான் தனுஷ்கோடி (தற்போது நகரமாக வளர்ந்து வருகிறது) இது தீவின் தெற்கு எல்லையில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இடமாகும்.
இலங்கையின் தலைமன்னார் பகுதியிலிருந்து சுமார் 31 கிமீ தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது.
அப்துல் கலாம் மணி மண்டபம்
ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பிறந்து வளர்ந்த ராமேஸ்வரத்தில் அவர் நினைவாக மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே இடத்தில் இவருக்கு மணி மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
மணி மண்டபத்தில் அரிய புகைப்படங்களும், ஓவியங்களும், ஏவுகணை மாதிரிகளும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சுற்றுலா பற்றி பல்வேறு செய்திகளை படிக்க சுற்றுலா பகுதியில் சென்று படியுங்கள்.