இராமநாதபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் முதற்கட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லுாரி மற்றும் இராஜா தினகர் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன் அம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பங்களை குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்து வருவதை பார்வையிட்டார். மேலும், முதற்கட்டமுகாம் 326 நியாயவிலைக்கடைகளில் அப்பகுதிகளுக்குறிய குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து விண்ணப்படிவங்கள் பெற்று பதிவு செய்யப்படுகிறது. இம்முகாம் இன்று (24.07.2023) தொடங்கி 4.08.2023 வரை நடைபெறும். அதேபோல் இரண்டாம்கட்ட முகாம் 439 நியாய விலைக்கடைகளில் 5.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறுகிறது.
நாள்தோறும் பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை சரியாக அமைத்துக்கொடுத்து கண்காணித்து வர வேண்டும் எனவும், அதேபோல் குடும்ப அட்டைதாரர்களும் தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட தேதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நியாயவிலைக்கடைகளில் பதிவு செய்திட வேண்டும் எனவும் அனைத்து விண்ணப்பங்களும் இரண்டு கட்ட முகாம்கள் மூலம் பதிவு செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர்கள் தமீம்ராஜா மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.