சரி… கலப்படம் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? எங்கே புகார் செய்ய வேண்டும்? வழிகாட்டுகிறார் தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த, சென்னை நியமன அலுவலர் பிரிவின் புகார் செய்யலாம்
கலப்படங்கள் குறித்து எப்படிப் புகார் செய்வது?
“கலப்படங்கள் குறித்துப் பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் புகார் அளிக்கலாம். இதற்காகத் தனி எண், உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரால் ஏற்படுத்தப்பட்டுத் தற்போது செயல்பட்டு வருகிறது.
நீங்கள் வாங்கும் பொருள்களில் கலப்படம் இருக்கிறது என உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் தகுந்த ஆதாரங்களுடனோ செய்தியையோ வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம்.
உடனே அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதவிர அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் நேரில் புகார் அளிக்கலாம்.
வாட்ஸ்அப் எண்: 9444042322
இதேபோல இன்னும் அதிகம்பேருக்குத் தெரியாத விஷயம், செய்தித்தாள்களில் வைத்து உணவுப்பொருள்களை உண்ணக்கூடாது என்பது.
சூடான பலகாரங்களைச் செய்தித்தாள்கள் அல்லது அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் வைத்து உண்டால், அவற்றில் இருக்கும் வேதிப்பொருள்களான கார்பன், காரீயம் போன்றவை உடலுக்குள் செல்லும்.
இவை உடலுக்குத் தீங்குவிளைவிக்கக்கூடியவை. உணவுப்பொருள்களை உண்பது மட்டுமல்ல; அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் கைகளைத் துடைப்பதுகூட ஆபத்தானதுதான்.
மேலும் கடைக்காரர்கள் செய்தித்தாள்களில் வைத்துச் சூடான உணவுப்பொருள்களை விநியோகிப்பதைக் கண்காணித்து அதனை உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் தடுத்து வருகிறோம்.
ஏதேனும் ஒரு கடைக்காரர் அப்படிச் செய்தால், உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் ‘மேம்பாட்டுத் தாக்கீது அறிக்கை’ கொடுக்கப்படும்.
அதற்கு அந்தக் கடைக்காரர் விளக்கமளிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் இந்தச் செயலில் ஈடுபட்டால் அவர்மீது வழக்குப் பதியவும் முடியும்.
எனவே செய்தித்தாள்களைக் கொண்டு உணவுப் பண்டங்கள் உண்பதைத் தவிர்ப்பது குறித்த விழிப்பு உணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும்”.
கலப்படம் மட்டுமல்ல… இதற்கும் புகார் செய்யலாம்!
உணவுப்பொருள்களில் கலப்படம் இருந்தால், தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்திருக்கும் வாட்ஸ்அப் எண் இருப்பதுபோல, பாக்கெட்டுகளில் வாங்கும் உணவுப் பொருள்களின் மீதான குறைகளையும் மொபைல் ஆப் மூலமாகப் பதிவு செய்யலாம்.
இதற்காகத் தமிழக அரசின் தொழிலாளர் துறையின்கீழ் இயங்கும் சட்டமுறை எடை, அளவுப் பிரிவு TN-LMCTS என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது.
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருள்களைப் பொறுத்தவரை சட்டப்படி, பாக்கெட்டின் மீது யார் அதை பேக் செய்தார், யார் அதைத் தயாரித்தார், எப்போது பேக் செய்யப்பட்டது, எடை எவ்வளவு, பாக்கெட்டிற்குள் என்ன இருக்கிறது, அதிகபட்ச சில்லறை விலை போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் நுகர்வோர் இதுகுறித்துப் புகார் அளிக்கலாம். இந்த ஆப்பில் எழுத்து வடிவத்தில் அல்லது போட்டோ, வீடியோ, ஆடியோ வடிவில் புகார் அளிக்கலாம்.
இதில் புகார் அளித்தால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
நடவடிக்கைகள் குறித்துப் புகார் செய்தவருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.
பாக்கெட் பொருள்கள் மட்டுமின்றி, மோட்டல்களில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருள்கள், அதிக விலை வைத்து விற்கப்படும் வாட்டர் பாட்டில்கள் போன்றவை குறித்தும் இதில் புகார் செய்ய முடியும்.
சாலையோரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள், ரேஷன் கடைகள், மோட்டல்கள் போன்ற அனைத்துக்கும் இந்த ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்.