புரட்டாசி வெள்ளிக்கிழமை – வளர்பிறை பிரதோஷம்
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் திரயோதசி திதி வரும் மாலையே பிரதோஷ தினமாக கருதப்படுகிறது.
வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும், தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் கட்டாயம் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
சிவ வழிபாடு
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. இந்த மாதத்தில் மகாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அதிகளவு நன்மையை கொடுக்கக்கூடியது.
சுக்கிர யோகம்
புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷம் அக்டோபர் 07ஆம் தேதி இன்று வெள்ளிக்கிழமை வருகிறது.
இன்று புரட்டாசி வெள்ளிக்கிழமை பிரதோஷம். வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த வெள்ளிக்கிழமை பிரதோஷ நன்னாளில் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டால் சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
செல்வம் பெருகும்
சிவனாரையும், நந்திதேவரையும் வணங்கி அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால் கடன், தரித்திரம் முதலான பொருளாதார சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் நீங்கி, சுக்கிர யோகம் கிடைக்கப் பெற்று, செல்வ வளம் பெருகும்.
வழிபாட்டு முறைகள்
பிரதோஷ தினத்தன்று காலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல் விரதமிருந்து மாலை சிவ தரிசனம் செய்ய வேண்டும். சிவனுக்கு சங்குப்பூ, வில்வ இலை கொண்டு பூஜை செய்வது விசேஷம் ஆகும்.
சோமசூக்த வலம்
பிரதோஷ தினத்தன்று மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோமசூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேசுவரரையும் வணங்க வேண்டும்.
சிவ தரிசனம்
பிரதோஷ வேளையில் தேவர்கள் சிவன் சன்னதியில் இருப்பார்கள். எனவே, இந்த நாளில் பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்ய வேண்டியது அவசியம்.
தோல் நோய்
புரட்டாசி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் நிவேதன பொருளாக படைத்து வழிபட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட அத்தனை நோய்களும் நீங்கப்பெற்று ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம்.
வெற்றி உறுதி
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும், பகைகள் விலகும், நோய்கள் நீங்கும் மற்றும் போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.
பிரதோஷ நாளில் என்ன செய்யலாம்?
பிரதோஷ நாட்களில் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வழங்கலாம்.
வில்வ இலைகளை கொண்டு சிவனை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.
பிரதோஷ நாட்களில் அன்னதானமாக தயிர்சாதம் வழங்குவது இன்னும் பலம் சேர்க்கும்.
பிரதோஷ நாளில் என்ன செய்யக்கூடாது?
நந்தியை மறைத்து கொண்டு சிவபெருமானை வணங்க கூடாது.
சிவபெருமான், நந்தியை வழிபடும்போது – பேசக்கூடாது.
எதிர்மறை எண்ணங்களை – வெளிப்படுத்தக் கூடாது.
சிவனின் நாமத்தை மட்டும் உச்சரித்து வணங்க வேண்டும்.
வருங்கால சந்ததிகள் சிறப்பாக வாழ பசுவுக்கு உணவு கொடுங்கள்.