புதுடில்லி: ‘தலைப்புச்செய்தியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு தந்திரமாகப் பேசுகிறார் ராகுல்’ என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார்.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு ஸ்மிருதி இரானி அளித்த பேட்டி:தேர்தலின் போது மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க ராகுல் அடிக்கடி கோவில்களுக்கு சென்று வந்தார். இது ஒரு கேலிக்கூத்தாக மாறியது. அந்த உத்தி பலிக்காததால், தற்போது ஜாதி பிரச்னையை பேச ஆரம்பித்துள்ளார். லோக்சபா தேர்தலில் வெற்றியை ருசித்துவிட்டதாக நினைக்கும் ராகுல், தற்போது வித்தியாசமான அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார். ராகுலின் சாதி அரசியல் ஒரு புதிய தந்திரம். மிஸ் இந்தியா போட்டிக்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் சமூக வலைதளங்களில் இப்படியெல்லாம் கூறுகிறார். ஏனெனில் அது தலைப்புச் செய்தியாகிறது. இதையெல்லாம் தெரிந்தே திட்டமிடுகிறார். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியடைந்தார் ஸ்மிருதி இரானி. இதன் மூலம் மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பறிபோனது; 2019 தேர்தலில் ராகுலிடம் வெற்றி பெற்றவர் ஸ்மிருதி என்பது குறிப்பிடத்தக்கது.