ராமநாத சுவாமி கோயிலில் புகுந்த மழை நீர்
ராமேசுவரம் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. ராமநாத சுவாமி கோயிலில் மழை நீர் புகுந்தது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி உள்ளது. இது மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக் கூடிய வாய்ப்புள்ளதாகவும், தீவிர அல்லது அதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ராமேசுவரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது. ராமேசுவரத்தில் பெய்த மழையால் நகராட்சி அலுவலகம் பகுதி, லெட்சுமண தீர்த்தம்,சீதா தீர்த்தம், தென்குடா பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. ராமநாத சுவாமி கோயிலில் மழை நீர் தேங்கியதால் கோயிலுக்குள் உள்ள தீர்த்தக் கிணறுகளில் நீராடுவதற்கும், சுவாமி, அம்பாள் சந்நிதிக்கு செல்வதற்கும் பக்தர்கள் சிரமப்பட்டனர்.