அப்படி நடந்தா உங்களை சுட்டுடுவேன்: ரஜினிகாந்த்
ரஜினி பத்திரிக்கையாளர்களிடம் கோபம் கொண்டதை பற்றி பயில்வான் ரங்கநாதன் நினைவுகூர்ந்தார்
ஸ்டைல், கெத்து, மாசு என தனக்கான தனி பாணியில் தமிழ் சினிமாவில் கலக்கிவருபவர் ரஜினி. கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகமான ரஜினி ஆரம்பத்தில் கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்தார். பின்பு இது சரிவராது நீங்க தனியா போய் நடிங்க, அப்போதான் நீங்க இன்னும் பெரிய ஹீரோவா வருவீங்க என கமல் கூற, ரஜினியும் தனியாக நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பின் தான் அவர் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. தில்லு முள்ளு,ஜானி, முள்ளும் மலரும், போன்ற பல படங்கள் ரஜினியின் ஹீரோ அந்தஸ்தை உயர்த்தியது. அதன் பின் தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார் ரஜினி. இந்நிலையில் தற்போது சர்ச்சை கருத்துக்களை கூறிவரும் பயில்வான் ரங்கநாதன் ரஜினியின் திருமணம் எவ்வாறு நடந்தது என்பதைப்பற்றி கூறியுள்ளார்.
ரஜினி 1981 ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தன்னை பேட்டியெடுக்க வந்த லதாவின் மீது காதல் கொண்ட ரஜினி அக்காதலை லதாவிடம் வெளிப்படுத்தினார். லதாவிற்கும் ரஜினியை பிடித்துப்போக இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இதையடுத்து ரஜினியின் குருவான பாலச்சந்தரிடம் ரஜினி தனது திருமண செய்தியை முதன்முதலில் கூறினார்.
பாலச்சந்தரின் ஆசிபெற்று இருவரும் திருப்பதியில் திருமணம் செய்ய தயாராகினர். இதனை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க ரஜினி அவர்களை சந்தித்தார். அப்போது எங்கள் திருமணம் திருப்பதியில் நடக்கவிருக்கிறது. அதில் அனைவரும் கலந்துகொள்ள இயலாது, ஏனென்றால் கோயிலில் அனைவருக்கு அனுமதி அளிக்க முடியாது. எனவே நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். மீடியாவை சார்ந்த அனைவர்க்கும் எங்கள் திருமண புகைப்படம் அனுப்பப்படும் என்றார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் நாங்கள் அதையும் மீறி உங்கள் திருமணத்திற்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்றார். இந்த கேள்வி ரஜினியை சற்று ஆத்திரப்படுத்தவே அப்படி வந்தால் நான் அவர்களை சுட்டுவிடுவேன் என்றார். இந்த பதில் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. பின்பு கோபத்தை கட்டுப்படுத்திய ரஜினி மன்னிச்சிடுங்க சற்று கோபம் அடைந்து விட்டேன், அவ்வாறு நான் பேசியிருக்கக்கூடாது என்றாராம். இதை தற்போது பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.