ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொது விநியோகத் திட்டம் மூலம் நியாய விலை கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பேவர் பிளாக் சாலை – ஆய்வு
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் செங்குடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 3.48 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகள் நடைபெறும் பொழுது உதவி பொறியாளர் கண்காணித்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.
பிரதம மந்திரி வீடு – ஆய்வு
அதனை தொடர்ந்து அதே பகுதியில் 2.40 இலட்சம் மதிப்பீட்டில் பாரத பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயனாளி வீடு கட்டி வருவதை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடித்திட பயனாளிக்கு அறிவுறுத்தினார்.
நர்சரி தோட்டம் – ஆய்வு
பின்னர் அதே பகுதியில் தேசிய ஊரக உறுதித் திட்டம் மூலம் 3.32 இலட்சம் மதிப்பீட்டில் நர்சரி தோட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு அதில் பணிபுரியும் பணியாளர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு அதிகளவு மரங்கள் வளர்த்து பயன்பெற வேண்டுமென அறிவுறுத்தினார்.

ரேஷன் கடை – ஆய்வு
பின்னர் வரவணி ஊராட்சி மற்றும் முத்துப்பட்டிணம் ஊராட்சி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளுக்கு சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வரும் உணவுப் பொருள்களின் தரம் குறித்து பார்வையிட்டதுடன், மேலும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்பு விவரம் குறித்து பதிவேடுகளை பார்வையிட்டதுடன் ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய பொருட்களை சரியாக வழங்கிட வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

நூலகம் – ஆய்வு
பின்னர் அதே பகுதியில் 11.08 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து வரவணி ஊராட்சியில் உள்ள நூலகத்திற்குச் சென்று பார்வையிட்டு நூலகம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு இருப்பதை பாராட்டியதுடன் இந்த நூலகத்தில் ஊரில் உள்ள வயதான பெரியவர்கள் படிக்க எடுத்துரைக்க வேண்டும். அதேபோல் நாள்தோறும் மாணவர்கள் நூலகத்திற்கு வந்து செல்ல அறிவுரை வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

மாணவியர் விடுதி – ஆய்வு
பின்னர் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக்கு சென்று உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வழங்கப்படவுள்ள உணவின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் நன்றாக பராமரித்திட வேண்டுமென விடுதி காப்பாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜன், வட்டார பொறியாளர்கள் திலீபன், ஜெகன், ஆர்.எஸ்.மங்கலம் விடுதி காப்பாளர் பூங்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.