ராமநாதபுரம் தேவிபட்டினம் ஊராட்சியில் நியாய விலை கடைகள் திடீர் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் ஊராட்சியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பதிவேடுகள் ஆய்வு
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தேவிபட்டினம் ஊராட்சியில் உள்ள காந்திநகர் பகுதியில் உள்ள நியாயவிலை கடைக்கு சென்று பொருள்களின் இருப்பு குறித்து பார்வையிட்டு பதிவேட்டில் உள்ளபடி உணவு பொருள்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். ஆய்வில் 2150 கிலோ அரிசி குறைபாடு குறித்து கண்டறிக்கப்பட்டது.
துவரம் பருப்பு 180 கிலோ இருப்பை விட அதிகமாக இருப்பதும் கண்டரியப்பட்டது. இது குறித்து விற்பனையாளர்களிடம் விவரம் கேட்டறிந்தவுடன் உணவுப் பொருள்களின் குறைபாடுக்காக ரூ.63,200/-யை அபராதம் விதித்து அரசு கணக்கில் செலுத்த விற்பனையாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
பொதுமக்களின் குறைகளை
தொடர்ந்து தேவிபட்டினம், பெரிய கடை வீதியில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று உணவுப் பொருள்கள் இருப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் அங்கிருந்த பொதுமக்களிடம் நியாய விலை கடையிலிருந்து உணவுப் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்ததுடன் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை தடையின்றி வழங்கிட வேண்டுமென பணியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், இராமநாதபுரம் வட்ட வழங்கல் அலுவலர் தமீம் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.