பசும்பொன் தேவர் சிலைக்கு ரூ.9.11 லட்சம் மதிப்புள்ள 10.4 கிலோ எடையிலான வெள்ளி கவசத்தை, தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜனிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
வெள்ளி கவசம்
பசும்பொன்னில் தேவர் குரு பூஜையையொட்டி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் தேவர் வாழ்ந்த வீட்டில் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜனிடம், ரூ. 9.11 லட்சம் மதிப்புள்ள 10.4 கிலோ எடையுள்ள தேவர் வெள்ளிக்கவசத்தை வழங்கினார்.
ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை தேவர் சிலைக்கு வழங்கினார். அது குரு பூஜை நாட்களில் நினைவிட சிலைக்கு சாற்றப்பட்டு, குருபூஜை முடிந்தபின் வங்கியில் ஒப்படைக்கப்படும்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் அ.தி.மு.க சார்பில் 10.4 கிலோ எடையிலான வெள்ளிக்கவசம் வழங்கி உள்ளேன். இந்தக் கவசத்தைதேவர் அறக்கட்டளையினர் பராமரித்து முக்கிய நாட்களில் தேவர் சிலைக்கு அணிவிப்பார்கள். அ.தி.முக.வின் ஒன்றரைக் கோடி தொண்டர்களும் இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.