Tuesday, October 3, 2023
Homeஆன்மிகம்விநாயகர் சதுர்த்தி பற்றிய சிறப்பு தகவல்

விநாயகர் சதுர்த்தி பற்றிய சிறப்பு தகவல்

  •  உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் “ஓம்’ என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அந்த பிரணவ மந்திரத்தின் சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான்.
  • முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது.
  • இந்த,& மஹாகணபதியை மூலப்பரம் பொருளாகவே பாவித்து வழிபடுவது என்பது வேதகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் மரபு.
  • ஆதிசங்கரர் வகுத்த ஷண்மத வழிபாட்டு முறைகளில் “காணாபத்தியம்’ எனப்படும் கணபதி வழிபாடே முதன்மை வகிக்கின்றது.
  • விநாயகர் தோன்றிய வரலாற்றினையும், நரமுக கணபதியான அவர் கஜமுக கணபதியான வரலாற்றினையும் புராணங்கள் பல்வேறுவிதமாக விவரிக்கின்றன.
  • சுருங்கக்கூறின், அற்புதங்கள் பல நிறைந்தது அவரது அவதாரம். ஆதியிலும் அந்தத்திலும் விளங்கியதால் ஆதியந்தமற்ற பரபிரம்ஹ ஸ்வரூபமாக இவரை, “ஜ்யேஷ்டராஜன்’ (மூத்தவர்) என்று வேதங்கள் அழைக்கின்றன.
  • கணங்களுக்கெல்லாம் தலைவரானதால் கணபதி எனவும் மேலானதலைவர் என்பதால் விநாயகர் எனவும், தடைகளை நீக்குவதால் விக்னேஸ்வரர் எனவும் பல பெயர்கள் உடையவரானார்.
  • சிவபெருமானுடைய பிள்ளையானதால் மரியாதையாகப் பிள்ளையார் என்று கூறுகின்றோம்.
  • விநாயகரின் திரு உருவத்தில் பல தெய்வங்கள் உறைகின்றனர். அவரது நாபி பிரம்ம சொரூபத்தையும், முகம் விஷ்ணு சொரூபத்தையும், இடப்பாகம் சக்தி வடிவையும், வலப்பாகம் சூரியனையும், முக்கண்கள் சிவசொரூபத்தையும் குறிக்கின்றன.
  • ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்தும் விதமாக மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ வடிவத்தில் பிரம்ம சுவரூபத்தையும் இணைத்துக்கொண்டு அற்புதமாக அவர் காட்சி தருகின்றார்.
  • ஒளவைப்பிராட்டியார் தனது விநாயகர் அகவலில் “தத்துவ நிலையைத் தந்து எனையாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே!’ என அருளிச்செய்ததை இத்தருணத்தில் நினைவிற் கொள்வது சாலச்சிறந்தது.
  • கணபதியை சகலதேவதைகளும் ஆராதித்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர் என இதிகாச புராணங்கள் கூறுகின்றன.
  • முப்புரங்களைப் பொசுக்கப்புறப்பட்ட பரமேஸ்வரனுடைய தேரின் அச்சு முறிந்தபோது விநாயகர் துஷ்டி, புஷ்டி என்ற தேவதைகளை வைத்து தேர் சீர் குலைந்து போகாமல் செப்பனிட்டுக் கொடுத்தார்.
  • “அச்சது பொடிசெய்த அதிதீரா’ என்பார் அருணகிரியார். பண்டாசுரனுடைய கோட்டையைத் தகர்த்து எரித்து அவன் வதத்திற்கு ஸ்ரீலலிதாம்பிகைக்கு உதவி புரிந்தவர் விக்னேஸ்வரர்.
  • திருமால் கண்ணனாக அவதரித்த தருணத்தில், கிடைப்பதற்கரிய சியமந்தக மணியை சத்ராஜித் என்ற மன்னனைக் கொன்று அபகரித்தார் என்ற அவப்பெயர் அவருக்கு ஏற்பட்டது.
  • நாரதர் அறிவுறுத்தியபடி கிருஷ்ணரும் விரதமிருந்து விநாயகப்பெருமானை சதுர்த்தி திதியில் பூஜித்து தனக்கு ஏற்பட்ட சங்கடம் நீங்கப்பெற்றார்.
  • முருகனுக்கு வள்ளியைத் திருமணம் புரிவதில் உறுதுணையாக இருந்ததும் விநாயகப் பெருமானே. சந்திரன் தனக்கு ஏற்பட்ட களங்கத்தை விநாயகர் அருளால் நீங்கப்பெற்றான். அகத்தியப்பெருமானின் கமண்டலத்தில் அடங்கியிருந்த காவிரியை காகத்தின் வடிவில் தென்னாட்டிற்கு அளித்தவர் கணநாதர்.
  • இதன் மூலம் அகத்தியருக்கும் அருள்புரிந்தார். தனக்கு அளிக்கப்பட்ட இட்சுவாகு குல தனமான ஸ்ரீரங்கநாதரை ரங்கவிமானத்துடன் விபீஷணன் இலங்கைக்கு எடுத்து செல்லுங்கால், தனது திருவிளையாடல் மூலம் ஸ்ரீரங்கத்தில் நிலைப்படுத்தி அருளியதும் விநாயகரே.
  • பக்தி நெறியில் பிள்ளையாரின் அருளைப்பெற்ற மகான்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. “அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று பாடிய ஒளவையைத் தன் துதிக்கையால் கைலாயத்தில் சேர்த்தார்.
  • திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி, விநாயகரின் அருளால் தேவாரங்களை மீட்டெடுத்தார். வேதங்களை வகைப்படுத்தி அருளிய வியாஸர் மஹாபாரதத்தை தான் சொல்லச் சொல்ல அதனை தனது தந்தத்தை உடைத்து எழுதியதும் விநாயகப்பெருமானே.
  • சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமானோடு திருவையாறு அருகில் வரும்போது காவிரி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஈசனை நினைந்து அவர் வேண்ட, “”சுந்தரனே வா!” என ஓலமிட்டு அழைத்து காவிரியின் நடுவில் பாதை அமைத்து அவருக்கு உதவியவர் விநாயகரே.
  • இவ்வாறு விண்ணோருக்கும் மண்ணோருக்கும் விநாயகர் அருளிச்செய்த செயல்கள், அற்புதங்கள் பட்டியல் நீளூம்.
  • பூஜை வழிபாடுகளில் மிக எளிமையானது விநாயகர் வழிபாடாகும். பொதுவாக எந்த நல்ல காரியங்களை ஆரம்பிப்பதென்றாலும் அவை தடைகள் இன்றி நடைபெறுவதற்கு மஞ்சளினால் செய்த பிள்ளையாரை பூஜை செய்து வழிபாட்டுடன் துவக்குவது வழக்கம்.
  • விநாயக சதுர்த்தியன்று களி மண்ணினால் செய்த விநாயகர் திருவுருவத்தை (பிம்பத்தை) வீட்டில் முறைப்படி பூஜை செய்ய வேண்டும்.
  • இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகின்றது. உலக சிருஷ்டியின் ஆதியில் தோன்றிய வஸ்துக்களில் பிருதிவி எனப்படும் மண்ணும், கடலும் முக்கியமானவை. விநாயகரே ஆதிதேவராக இருப்பதால் இவரை பிருதிவியால் (களிமண்ணால்) உருவாக்கி விநாயக சதுர்த்தியன்று பூஜிக்கின்றோம்.
  • புனர்பூஜை கழித்து திரும்பவும் அந்த பிம்பத்தை கடல்நீரில் கரைத்து விடுகின்றோம்.

விநாயகர் பூஜையில் அவசியம் இடம் பெறவேண்டியவை:

  • அணிவிப்பதற்கு: எருக்கம் பூக்களால் ஆன மாலை,
  • அர்ச்சிப்பதற்கு: அருகம் புற்கள்,
  • நிவேதனத்திற்கு: மோதகம் என்று சொல்லப்படும் அரிசிமாவினால் ஆன கொழுக்கட்டை,

வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை:

  • நெற்றிப்பொட்டில் கைகளால் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுதலும் நன்று.
  • வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுளான விநாயகப் பெருமானை எந்நாளிலும் வழிபடுவோம். நம்பிக்கையுடன் அந்த தும்பிக்கையானை வழிபட்டால் கற்பகத் தருவாக இருந்து வாழ்வில் நாம் நலம் பெற வேண்டியவைகள் அனைத்தையும் அருளுவார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments