மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்! – அசத்தும் மாவட்ட நிர்வாகம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் போட்டிகள்.
உதவி ஆட்சியர் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, தலைமையேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.
மேலும் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 3ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்
இவ்விளையாட்டுப் போட்டியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், இல்லங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் என 120 மாற்றுத்திறனாளிகளும் 26 சிறப்பு ஆசிரியப் பணியாளர்களும் மற்றும் அரசுப்பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.உடலியக்க குறைபாடு உடையவர்கள் காதுகேளாதவர்கள், பார்வையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகிய பிரிவுகளில் 29 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
முக்கிய அலுவலக நபர்கள் பங்கேற்றனர்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற 14 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.