பரமக்குடி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட நயினார்கோவில் மேல்நிலைப் பள்ளியில் வரும் அக்.18 காலை 9 மணிக்கு ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற உள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம்பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என்று மிகப்பெரிய அளவிலான சிறப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டம் மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கிற வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.15,000 வரையிலும் அரசு மருத்துவமனைகளில் ரூ.4,000 வரை செலவாகும். முழு உடற்பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த திட்டத்தை பொறுத்த வரை பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மகப்பேறுயியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெற இருக்கிறது.
மேலும், இந்த முகாமில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை கண்டறிந்து அங்கேயே சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. புதிதாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைவதற்குரிய ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் ஹச்.ஐ.எம்.எஸ் 3.0 மூலம் கணிணிமயமாக்கப்பட உள்ளது. எனவே, பொது மக்கள் அனைவரும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


 
                                    