இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் இணைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான (CHILD HOUSE) மாணவ நல அமைப்பு சங்கம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையேற்று மாணவ நல அமைப்பு சங்கத்திற்கான இலச்சினை வெளியிட்டார்
இராமநாதபுரம் மாவட்டம் தொழில்துறையில் நடுநிலையில் இருந்து வந்தாலும் கல்வியை பொறுத்தவரை முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகின்றன. இந்நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு அறிவு திறனை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறும் அளவிற்கு தேவையான பயிற்சிகளை வழங்கி ஒவ்வொரு மாணவரின் திறமையை மேம்படுத்தும் வகையில் மற்ற இடங்களை போல் இங்கு மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் அறிவுத்திறன் மேம்பாடு அடைந்திடும் வகையில் (CHILD HOUSE) மாணவ நல அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்டத்தில் உள்ள 293 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளை முறையே அந்தந்த வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகளை நான்கு வகையாக பிரித்து அவர்கள் எளிதில் அறியும் வண்ணம் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா குழு பிரித்து அவர்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதில் உள்ள மாணவ, மாணவிகளின் குழு தலைவராக நியமித்து அவர்களும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இக்குழுவில் உள்ள மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி வகுப்புகள் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற விளையாட்டை ஊக்குவித்தல் கலைத்திருவிழா, பயிற்சி பட்டறை, வாசிப்பு தன்மையை மேம்படுத்துதல் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
இதன் நோக்கம் மாணவ, மாணவிகள் தங்கள் திறமையே மேம்படுத்தி எதில் ஆர்வம் அதிகம் உள்ளதோ, அதில் அவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் இத்திட்டம் மாணவ, மாணவிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி ஒரு மாணவனின் அன்றாட செயல்பாடு என்பது இக்குழு துவங்கியதற்கு பின் நல்ல மாற்றத்தை கண்டு அவர்களுடைய வளர்ச்சி ஏற்ற தக்கதாக அமையும். அதுபோல் ஒவ்வொரு நாளும் வகுப்பில் அவர்களுடைய தனிமனித ஒழுக்கம் மற்றும் வகுப்பில் பாட முறைகளை கவனித்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன் நாள்தோறும் புத்தகங்கள் வாசிப்பு திறனை மேம்படுத்துதல், விளையாட்டில் ஆர்வமுள்ள விளையாட்டுகளை தேர்வு செய்து அதில் பங்கேற்று திறமையே மேம்படுத்துதல். அதேபோல் இலக்கியப்போட்டிகளில் பங்கேற்றல் என கல்வியுடன் சேர்த்து அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்று திறனை மேம்படுத்துதலே இந்த அமைப்பின் சிறப்புத் தன்மையாகும். அதிலும் குறிப்பாக கல்வியில் பின் தங்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளை வழங்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும். இத்திட்டத்தை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்படும் பொழுது வரும் ஆண்டில் அரசு மொழி தேர்வு முடிவுகளில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். இத்திட்டத்தை ஒவ்வொரு ஆசிரியரும் சிறப்புடன் செயலாற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் இதற்கு CHILD அமைப்பு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தை எதிர்காலமும் உங்கள் பணியில் உயர்ந்திட வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் இன்று பயிற்சி பெற வந்துள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டு இத்திட்டத்தை மாபெரும் வெற்றி திட்டமாக செயல்படுத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஆசிரியர் பயிற்சி மைய பேராசிரியர் டேவிட், முகவை சங்கமம் செயலாளர் வான்தமிழ் இளம் பரிதி , மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.