ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அரசு முதன்மைச் செயலர் கைத்தறி, கைத்திறன், துணிநூல்/கதர்த்துறை மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பணிகள் ஆய்வு
கூட்டத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை மையம் ஆகியவற்றின் பணிகள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அந்தந்த ஆண்டிற்கு உரிய வேளாண் உபகரணங்களை மானியத்துடன் வழங்கிட வேண்டும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பணிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தையிட உறுதுணையாக இருந்திட வேண்டும் என தெரிவித்தார்.
கருவேல மரங்கள்
கருவேல மரங்களை அகற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விவசாயிகளை நெல் விற்பனை செய்ய அறிவுறுத்த வேண்டும்.
பயிர் கடன் விழிப்புணர்வு
கூடுதலாக பயிர் கடன் வழங்க போதுமான விழிப்புணர்வு மற்றும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு விழா மற்றும் விவசாயிகள் தொடர்பான கூட்டம் மற்றும் கருத்தரங்கில் விவசாயிகள் ஒரு வருடத்தில் வட்டி இல்லாமல் திரும்ப செலுத்தக் கூடிய பயிர்க் கடன் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை
கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை போல் தனியார் வங்கிகளும் தாராளமாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள வளர்ச்சித் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளும்போது பணிகளின் தன்மை, தரம் உள்ளிட்டவற்றை தொழில்நுட்ப விபரக் குறிப்பு உள்ளிட்டவை ஒப்பிட்டு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பைகளை பெற வேண்டும். திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல் படுத்தவேண்டும். பெரிய கடைகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களை நிறுவனமே திடக்கழிவு மேலாண்மையினை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
சமுதாய சுகாதார வளாகம்
கிராம பகுதிகளில் தேவையான இடங்களில் மட்டுமே சமுதாய சுகாதார வளாகத்தினை கட்ட வேண்டும். தேவையில்லாத இடங்களில் சமுதாய சுகாதார வளாகம் கட்ட அனுமதி வழங்க வேண்டாம் மாறாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகளை அந்தந்த நிதியாண்டிலே முடித்திட வேண்டும்.
புதிய திட்டப்பணிகள்
அதேபோல் புதிய திட்டப் பணிகளுக்கு தேவையான முன்வரைகளை தயார் செய்திட வேண்டும். மக்களின் வசதிகளுக்கு ஏற்ப உட்கட்டமைப்புகளை காலதாமதமின்றி விரிவுபடுத்தும் பணிகளை அலுவலர்கள் அவ்வப்போது திட்டமிட்டு செயல்படுவதுடன் அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய அனைத்து துறையின் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அரசு முதன்மைச் செயலர் கைத்தறி, கைத்திறன், துணிநூல் / கதர்த்துறை மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பரமக்குடி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயனா சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கொடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்