ராமநாதபுரம் தேவிபட்டினம் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் ஆய்வு
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேவிபட்டினம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சிகிச்சை பிரிவிற்கான கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு சிகிச்சை வழங்கும் பகுதிக்குச் சென்று சிகிச்சை வழங்குவது குறித்து கேட்டறிந்தவுடன் சிகிச்சை பெற வந்த மக்களிடம் காலதாமதமின்றி சிகிச்சை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
பின்னர் அதே பகுதியில் உள்ள மரக்காயர் ஊரணியில் ரூ.15.72 இலட்சம் மதிப்பீட்டில கரை பலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளதை பார்வையிட்டு இப்பணி மேற்கொள்ளும் பொழுது இந்த ஊரணிக்கு வரக்கூடிய மழை நீருக்கான வரத்து கால்வாய்களையும் சீரமைத்து ஊரணியில் தண்ணீர் முழுமையாக தேங்கி நிற்கும் வகையில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து தேவிபட்டினம், காந்தி நகர் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.77 இலட்சம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டி வருவதை பார்வையிட்டு பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்திட பயனாளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள்
தொடர்ந்து தேவிபட்டினம் ஊராட்சியில் ரூ.11.27 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், ரூபாய் 8.83 இலட்சம் மதிப்பீட்டில் கிணறு சீரமைக்கப்பட்டுள்ளதையும், காமராஜர் தெருவில் ரூ.9.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையினையும் பார்வையிட்டு பணியின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் படையாச்சி காலணியில் ரூ.5.23 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருவதையும், மேலப்பள்ளிவாசல் பகுதியில் ரூ.13.09 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படுவதையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
திட்ட பணிகள் ஆய்வு
தொடர்ந்து சோலைநகர் பகுதியில் ரூ.6.12 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டதுடன், பின்னர் பூவாடை பகுதியில் ரூ.24.40 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மனித சக்தியின் மூலம் பண்ணை குட்டை
அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணி நடைபெறும் பொழுது பொறுப்பு அலுவலர்கள் நாள்தோறும் எந்த அளவிற்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கணக்கீடு செய்து கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பணியாளர்கள் திட்டமிட்டபடி பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப் பெருமாள், ஒன்றிய பொறியாளர்கள் திரு.அர்ஜுனன்,ரவி, தேவிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஹாமியா ராணி, அரசு ஆரம்ப சுகாதார மருத்துவம் ஜன்னத்து யாஸ்மின், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.