Saturday, December 2, 2023
Homeராமநாதபுரம்தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் சே.கருணாஸ் கோரிக்கை

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் சே.கருணாஸ் கோரிக்கை

 தமிழகத்தில்  ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனர், முன்னாள் எம்.எல்.ஏ சே.கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவை – அரசுக்கு அறிக்கை

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனர், முன்னாள் எம்.எல்.ஏ சே.கருணாஸ் அறிக்கை, ” தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2016 -ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து பலமுறை சட்டப்பேரவையில் வலியுறுத்தி வந்துள்ளேன். தமிழ்நாட்டில் ஜாதிவாரியான புள்ளி விவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் 2020 ஆம் ஆண்டு இறுதியில் எடப்பாடி கே.பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆணையம்

இந்த ஆணையம் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்படாமல் செயல் இழந்தது. அதற்கு முன்பாகவே பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் குறித்த ஆராய 1969 ல் சட்டநாதன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பழைய புள்ளி விவரங்களின் படியே தனது பரிந்துரைகளை அளித்தது. 1983-ல் அம்பாசங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் மாதிரி கணக்கீடு முறையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி பரிந்துரைகள் அளித்தது.

பொதுநல வழக்கு

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 1931 ஆங்கிலேயர் காலத்துக்கு பின்பு இந்தியாவில் ஜாதியவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தனது மனுவில் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் இந்தியா முழுவதும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என 2010 -ல் தீர்ப்பு வழங்கினர். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.

அதிமுக – 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு 

இவ்வாறு நீதிமன்றங்களில் பல்வேறு கருத்துகள் இருப்பதால், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என முக்குலத்தார் புலிப்படை கட்சி, முக்குலத்தோர் முன்னேற்ற சங்கம் உள்பட 13 மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரனையில் 2021 நவ -ல் உச்சநீதிமன்றம் 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்தது.

புள்ளிவிவர – சேகரிப்பு சட்டம்

தமிழகத்தில் ஒரு ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது இன்னொரு ஜாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோருகின்றனர். ஆனால் அரசிடம் ஜாதி தொடர்பாக எந்த புள்ளி விபரமும் கிடையாது. எனவே நாங்கள் ஜாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். தமிழக அரசு புள்ளிவிவர சேகரிப்பு சட்டம் 2008 -ன் படி ஜாதிவாரி சமூக, கல்வி, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தி தமிழகத்தில் பி.சி, எம்.பி.சி., டி.என்.டி., எஸ்.சி., எஸ்.டி சமூகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.

அரசு நலத்திட்டங்கள் 

எல்லா ஜாதியினரை பற்றியும் துல்லியமாக தகவல்களும், புள்ளி விவரங்களும் ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம் கிடைத்தால் மட்டுமே அரசு நலத்திட்டங்களில் உண்மையான பலன்கள், இதுவரை கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கும் கிடைக்கபடும் என்ற வாதமும் உள்ளது.

கல்வி நிறுவனங்கள்

எனவே ஜாதிவாரி கணக்கு கெடுப்பு மட்டுமே இதனை உறுதிப்படுத்தும் ஒரே கருவி. கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைத்து ஜாதியினருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை வெளிக்கொண்டு வந்தால் தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும்.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான ஆணையம் அமைத்து, புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments