தமிழ்நாடு அரசால் வேளாண்மைப் பொறியியல்துறை மூலம், நடப்பு ஆண்டில் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் சிறு,குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக புதிய மின்மோட்டார் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
வேளாண்மைப்பொறியியல் துறை சார்பாக
தமிழ்நாடு அரசால் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாருக்குப் பதில் புதிய மின்மோட்டார் பம்பசெட் வழங்குவதற்கு 150 பேருக்கு தலா ரூ.15,000/- வீதம் ரூ.22.50 இலட்சத்திற்கு மானியம் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்மோட்டார் பம்ப்செட்டுகள் வாங்க பின்னேற்பு மானியமாக ரூ.15000/- அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும். இத்திட்டமானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட கிராமங்களில் உள்ள வேளாண் பெருமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் திறன் குறைந்த மின்மோட்டார் பம்புசெட்டுகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகரித்து பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகரிக்கிறது. நிலத்தடிநீர் பயன்பாட்டுத்திறன் மேம்படுத்திட ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள் பழைய திறனற்ற மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்புவர்கள், புதிய ஆழ்துளைக் கிணறு, திறந்த வெளிக்கிணறு அமைத்து புதிய மின்மோட்டார் பம்புசெட் வாங்க விரும்புவர்கள், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் 4 ஸ்டார் குறியீடுள்ள மோட்டார் வாங்கிட இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இணையதளத்தில் பதிவிடுதல்
இத்திட்டம் நுண்ணீர் பாசன இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை பயன்படுத்திட விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட கிராமங்களில் உள்ள வேளாண் பெருமக்கள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடைந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம்.
இராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார விவசாயிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கருவூலக கட்டிட முதல் தளத்தில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர்(வே.பொ), இராமநாதபுரம் அலுவலகத்திலும் (கைபேசி எண்: 9489152279), மற்றும்
பரமக்குடி, நயினார்கோயில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி, 5/339A, சௌகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர்(வே.பொ), பரமக்குடி அலுவலகத்திலும் (கைபேசி எண்: 9865967063) மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கட்டிடம் 2-ஆம் தளத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் (வே.பொ), இராமநாதபுரம் (தொலைபேசி எண்: 04567 232493) அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.