மென்பொருள் குளறுபடியால் ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை
மென்பொருள் குளறுபடியால் கல்லல், என்.மேலையூர் ஆசிரியர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் இல்லை.
சிவகங்கை மாவட்டம் கல்லல், என்.மேலையூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கு மென்பொருள் குளறுபடியால் 5 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர்களின் புகார்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கருவூலத் துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வளமேலாண்மைத் திட்டம் என்ற மென்பொருள் மூலம் ஊதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மென்பொருளை தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வடிவமைத்து கொடுத்தது. மென் பொருளை கையாள்வது குறித்து அந்நிறுவனம் பணியாளர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கவில்லை. இதனால் அடிக்கடி மென்பொருளில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்ய முடியாமல் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் மென்பொருளில் ஏற்பட்ட குளறுபடியால், கல்லல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் என்.மேலையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சில மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை
நடவடிக்கை எடுக்க
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியது கல்லல், என்.மேலையூர் பள்ளிகளில் உள்ள சில ஆசிரியர் பணியிடங்கள் மென் பொருளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பணியிடங்களுக்கு மாறுதலாகி வந்த ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஊதியம் வழங்கவில்லை.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள், கருவூல அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் இந்த குளறுபடியை சென்னையில்தான் சரி செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினையை தீர்த்து ஆசிரியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்