ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்
நவாஸ்கனி எம்.பி தகவல்.
தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ராதாகிருஷ்ணனை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைத் தலைவருமான நவாஸ்கனி எம்.பி சந்தித்து விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது,
கீழக்கரை – ஜெட்டி பாலம்
இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் கீழக்கரை நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடிக்க செல்லக்கூடிய மீன்பிடி துறைமுக ஜெட்டி பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை நான் மீன்வளத்துறை அதிகாரிகளோடு நேரில் சென்று ஆய்வு செய்தேன். மேற்கூறிய ஜெட்டி பாலம் மிகவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாலத்தை சீரமைக்க நிதி ஒதுக்கி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீற்றம், அரிப்பு – தூண்டில் வளைவு
கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்களும், பொதுமக்களும் கடல் சீற்றம், கடல் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே கடல் அலையை அமைதிப்படுத்தும் வண்ணம் தூண்டில் வளைவு ஏற்படுத்த வேண்டும் என கடலோர பகுதி மக்களும், மீனவர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மூக்கையூர் மீன்பிடி துறைமுகம், கீழமுந்தல், பாம்பன் வடக்கு கடற்கரை, குந்துகால் மீன்பிடி துறைமுகம், இராமேஸ்வரம், வாலிநோக்கம், கன்னிராஜபுரம் ஆகிய பகுதிகளில் தூண்டில் வளைவு ஏற்படுத்த வேண்டும்.
மூக்கையூர் – டீசல் பங்க்
மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் பயன்படுத்தும் வண்ணம் ஏற்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையம் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருக்கிறது. இதனால் மீனவர்கள் தொலை தூரத்திற்கு சென்று டீசல் நிரப்பும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
எனவே மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்ட டீசல் நிலையத்தை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
தங்கச்சி மடம் – படகுகள் நிறுத்தம்
தங்கச்சிமடம் பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட படகுகளை நிறுத்தும் வண்ணம் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்.
பாசிப்பட்டிணம் – ஆற்றினை தூர்வாரி
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கலியநகரி ஊராட்சி பாசிப்பட்டிணத்தில் அமைந்திருக்கும் பாசிமுனை ஆறு பகுதியை தூர்வாரி, அகலப்படுத்தி உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். என தெரிவித்துள்ளார்.