பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மதுரை விமான நிலையம்’ என்ற பெயர் பலகையை அகற்றிய விவகாரம்.
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் ‘பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மதுரை விமான நிலையம்’ என்ற பெயர் பலகையை அகற்றிய விவகாரம். காவல் துணை கண்காணிப்பாளர் மீது தமிழக ஆளுநர், தமிழக டி.ஜி.பியிடம் புகார்.
கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த ‘பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மதுரை விமான நிலையம்’ என்ற பிரம்மாண்ட கட்டவுட்டின் பெயர் பலகை அக்டோபர் 29ஆம் தேதி இரவு கமுதி காவல் துறையினரால் அகற்றப்பட்டது.
உண்ணாவிரதம் அறிவிப்பு
இதனை கண்டித்து பசும்பொனில் அக்.30 ஆம் தேதி காலை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ,.வுமான நடிகர் கருணாஸ் அறிவித்தார். இதற்கிடையில் அக்.30ஆம் தேதி காலை பெயர் பலகை மீண்டும் பொருத்தப்பட்டிருந்தது. அதனால் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து, உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக கருணாஸ் அறிக்கை வெளியிட்டார்.
தமிழக கவர்னர், தமிழக டி.ஜி.பி
இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகியும், அனைத்து சமுதாய மக்களாலும் போற்றப்படும் தேசிய தலைவரின் பெயரை கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் வருவாய்த்துறை அதிகாரிகளின் உத்தரவின்றி, தன்னிச்சையாக உள்நோக்கத்துடன் அகற்றி உள்ளதாக அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்துராமலிங்கம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, தமிழக முதல்வர், காவல்துறை தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
பெயருக்கு களங்கம்
மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, சொந்த இடத்தில் வைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.