உயிருக்கு போராடிய புள்ளிமானை மீட்ட பொதுமக்கள்.
பரமக்குடியில் தெரு நாய்கள் கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு, பின் அந்தப் புள்ளிமானை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு தூக்கிச் சென்றனர்.தண்ணீர், இறை தேடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில், வாணியவல்லம், அண்டக்குடி, தெளிச்சாத்தநல்லூர், கமுதக்குடி, கீழப்பெருங்கரை, சூடியூர் உள்ளிட்ட கிராமங்களில் அடர்ந்த வனபகுதி போல் இருப்பதால் அதிகளவில் புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. இந்த மான்கள் அடிக்கடி தண்ணீர், இறை தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அவ்வப்போது புள்ளி மான்கள் உலா வருகிறது.
மூன்று வயது பெண்மான்
பரமக்குடி மேலச்சத்திரம் வைகை ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த புள்ளிமானை தென்கரையில் உள்ள நாய்கள் ஒன்று சேர்ந்து துரத்தி துரத்தி கடித்ததால் புள்ளி மானின் உடம்பில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று வயதுள்ள பெண் புள்ளிமானை உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்டு ஆட்டோவில் ஏற்றிச் சென்று கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உயிருக்கு போராடிய
வனத்துறை அதிகாரிகளின் வருகையை எதிர்பார்க்காமல் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக உயிருக்கு போராடிய புள்ளிமானை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததை பலரும் பாராட்டினர்.
கோரிக்கை
பரமக்குடி மக்கள் வனத்துறை அதிகாரிகளை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். அதன் பின் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு வனத்துறை அதிகாரிகளின் செல்போன் என்னை வாங்கி பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகள் காயம் அடைந்த புள்ளி மானை மீட்டு பாதுகாப்பாக வனத்துறை பகுதியில் திரும்ப விட்டனர்.