Thursday, April 18, 2024
Homeசெய்திகள்'தியாகராஜ பாகவதர் போல் வாழ்ந்தவர் யாரும் இல்லை!' - நினைவு தின சிறப்புப் பகிர்வு

‘தியாகராஜ பாகவதர் போல் வாழ்ந்தவர் யாரும் இல்லை!’ – நினைவு தின சிறப்புப் பகிர்வு

தமிழ் திரையுலகின் அந்தக் கால சூப்பர் ஸ்டார் நடிகரும் பாடகருமான தியாகராஜ பாகவதர் 1959-ம் ஆண்டு இதே நவம்பர் 1ம் தேதி சென்னை அரசு பொதுமருத்துமனையில் காலமானார்.

திரைப்படம் கதாநாயகனாக அறிமுகமான

1909- ஆம் வருடம் ஜனவரி 3 ஆம் தேதி மாயவரததில் பிறந்த மாயவரம் கிருஷ்ணசுவாமி தியாகராஜன் நடிகரான பின் எம்கேடி என்று சுருக்கமாகவும் அழைக்கப்பட்டார். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அவர் நடித்த 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. 1944-ல் வெளியான இவரின் சாதனைப் படமான ‘ஹரிதாஸ் ‘, 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை பெற்றது. அதிலும் ஹரிதாஸு’க்குப் பிறகு பல தயாரிப்பு நிறுவனங்கள் அவரின் வீடு தேடி வந்து பணத்தைக் கொட்டின. பாகவதர் தண்ணீரில் பன்னீர் கலந்து குளிப்பார் என்பது போல அந்தக்காலத்தில் வதந்திகள் இருந்தன. அவற்றில் கற்பனைதான் அதிகம் என்றாலும் அவர் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினார். கைகளில் வைர மோதிரங்கள், காதுகளில் வைரக்கடுக்கன், பட்டுச்சட்டை, பட்டுவேட்டி, பாக்கெட்டில் தங்கப்பேனா, நெற்றியில் ஜவ்வாதுப்பொட்டு. இந்த அலங்காரங்களுடன் பாகவதரைப் பார்த்தவர்களின் கண்களுக்கு அவர் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கந்தர்வன் போலத் தோன்றியதில் வியப்பில்லை. திருநீலகண்டர் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாகவதரிடம், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி “இனி பட்டுச்சட்டை, பட்டு வேட்டி அணிவதை விட்டுவிடுங்கள். கதர் துணி அணியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். அன்று முதல் பாகவதர் கதர் அணிய தொடங்கினார்.

பல படங்கள் நடித்த கதாநாயகன்

’யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பது மாதிரி, காற்றில் கலந்துவரும் நறுமணத்தை வைத்தே எம்.கே.டி. வருகிறார் என்று உணர்ந்துகொள்வார்கள். எம்.கே.டி. வந்துவிட்டு போனபின்னரும் கூட நீண்ட நேரத்திற்கு அந்த இடத்தில் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் என பூரித்துச்சொல்கிறார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அழகில் ஆண்களும் பெண்களும் மயங்கிக்கிடந்தார்கள். அந்த எம்.ஜி.ஆரே ஒரு காலத்தில் எம்.கே.டியின் அழகில் சொக்கிக்கிடந்தார் என்போருமுண்டு. அந்தக்காலத்தில் இவரைக்காண கூடும் கூட்டத்தை, ‘ஜவகர்லால் நேருவுக்கு கூடும் கூட்டத்தை விடவும் அதிகம்’என்றே விமர்சனம் செய்தனர். ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிப்பார்களாம்.அந்த அளவிற்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம். ஒரு சமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே கார் நிற்க நேரிட்டது. பாகவதர் காரிலிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது. ரயில் வந்தவுடன் கார்டு, ரயிலை நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர் என்றொரு தகவலுமுண்டு.

ஆனால், ‘ஹரிதாஸு’க்குப் பிறகு அவர் சிறையில் இருக்கவேண்டிய நிலை. அட்வான்ஸ் கொடுத்த நிறுவனங்கள் சிறையில் போய் அவரின் சட்டையைப் பிடிக்க ஆரம்பித்தன. ‘ ‘வதன்’, ‘நம்பியாண்டார் நம்பி’, ‘ராஜயோகி’, ‘மோகினித்தீவு’, ‘பக்தமேதா’ போன்ற பல படங்கள் பூஜையோடு நின்றுவிட்டன. தயாரிப்பாளர்கள் அவரின் கழுத்தை நெரிக்க, தன் தம்பியைக் கூப்பிட்டு சொத்துகளை விற்று கடன்களைத் திருப்பிச் செலுத்தினார்.

இதனால்தான் வெளியே வந்தபிறகு அவருக்கு சினிமா உலகம் கசந்தது. பாகவதர் கடைசி காலத்தில் பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்தார் என்று எல்லாம் பலர் எழுதுகிறார்கள். பாகவதரின் சிறைக்குப் பின்னான வாழ்க்கை தாழ்ந்து போனதே தவிர இவர்கள் சொல்லும்படி இல்லை என்பதே உண்மை…

அவர் கடைசியாக சிவகாமி படத்தில் நடித்தார். அந்த படத்தின இறுதி காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காட்சிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்.கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இறுதியில் 1959-ம் ஆண்டு இதே நவம்பர் 1ம் தேதி சென்னை அரசு பொதுமருத்துமனையில் காலமானார்.எம் கே டி போல் வாழ்ந்தவரும் இல்லை தாழ்ச்சி அடைந்தவரும் இல்லை எனலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments